தமிழ்நாடு மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை கைது செய்து இருக்கிறது.
இதன் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வசம் இருந்த துறைகளை 2 அமைச்சா்களுக்கு கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைக் கடிதம் அனுப்பியிருந்தார்.
அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்துறை, அமைச்சா் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை ஒதுக்குமாறு குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் முதல்வர் பரிந்துரை கடிதத்தை பரிசீலித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளதால் மருத்துவக்காரணங்களுக்காக இலாகாவை மாற்றுவதாக கூறப்பட்டு உள்ளது. அவரை அமலாக்கத்துறை கைது செய்ததை கடிதத்தில் குறிப்பிடாதது ஏன்?’ என்று கேட்டு கடிதத்தை திருப்பி அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நடவடிக்கைக்கு திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், ‘அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வகித்து வந்த துறைகளை இரு வேறு அமைச்சர்களிடம் ஒப்படைக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதனை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இது அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் அடாவடிப்போக்காகும்.
அமைச்சர்கள் யார் யார்? அவர்களுக்கு என்னென்ன துறைகள்? போன்றவற்றை தீர்மானிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கே உண்டு. இதில் ஆளுநர் தலையிடுவதும், விமர்சிப்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டது ஆகும். ராஜ்பவன் ஆளுநர் மாளிகையா? ஆர்.எஸ்.எஸ் அலுவலகமா? என்கிற அய்யம் எழுகிறது' என பதிவிட்டுள்ளார்.