திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காவல் உட்கோட்டத்தில் சாராயம் மற்றும் அரசு மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் வாணியம்பாடி திருமாஞ்சோலை பகுதியில் சாராயம் விற்ற ஜெயசீலன் (42), பிரபு தேவா (30) மற்றும் நியூடவுன் பகுதியில் சாராயம் விற்ற சரவணன் (29) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 52 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேப்போல் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராயம் மற்றும் அரசு மதுபானங்களை விற்ற பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன், தசரதன், சி.வி பட்டறை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, புருஷோத்தம குப்பம் பகுதியை சேர்ந்த முனியம்மா, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் கைது செய்து செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 25 மதுபாட்டில்கள், 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேப்போல வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாராயம் விற்பனை செய்து வந்த அனுமுத்து ராணி, பெருமாள், உஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேப்போல் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட பெத்தூர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 9 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறாக வாணியம்பாடி காவல் உட்கோட்டப் பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் சாராயம் விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 25 மதுபாட்டில் மற்றும் 210 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகள் வாணியம்பாடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.