”சாராய சாவுக்கு எங்களின் நியாயமான பணத்தை நிவாரணமாக அரசுக்கு கொடுக்கிறோம். அந்த பணத்தைக்கொடுத்து அவமானத்தை அரசு துடைத்துக்கொள்ளட்டும்” என்றபடி கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் பொங்கியிருப்பது ஆளும் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் பரபரப்பாக பேசக்கூடிய எந்தவொரு சம்பவம் நடைபெற்றாலும் திருவடிக்குடில் சுவாமிகள் அது குறித்து தனது கருத்தை பட்டவர்த்தனமாக தெரிவித்து வருவது என்பது வழக்கமான ஒன்று. அதுபோல் சமீபத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டக்களில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகள் தொடர்பாக சற்று அனல் தெறிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி தனது கருத்தை வெளிப்படுத்தியிருப்பது திமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவடிக்குடில் சுவாமிகளிடம் பேசினோம். “கடந்த இரண்டு நாட்களாக பேசப்படும் செய்திகளாக கள்ளாச்சாராய உயிரிழப்புகள் உள்ளன. உயிரிழப்பு என்பது மனத்துயரை ஏற்படுத்தினாலும் இதன் காரணங்கள் நம்மை கண் சிவக்க வைக்கின்றன. இவை அனைத்திற்கும் தாய் மடியாக ‘டாஸ்மாக்’ என்னும் தூங்கா துறை{!] உள்ளதை யாரும் மறுத்துவிட முடியாது. இன்னும் உணரவில்லையானால் உடம்பில் குருதி ஏன் ஓடவேண்டும்? என்னும் கேள்விதான் பிறக்கும். இவ்வகையான உயிரிழப்பிற்கு நிவாரணமாக பல லட்சங்களை வீசுவது மரணத்தை விலைபேசி மறைப்பதாகும். இது தவறான முன்னுதாரணமாக பதிவு செய்யப்பட்டுவிடும். இதில் குறைந்த பட்ச ஆறுதல் சொல்வதற்குக்கூட நீண்ட யோசனையாக உள்ளது. ஆனால் அரசியலில் ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் போட்டி போட்டுக்கொண்டு இந்த விஷயத்தை தாலாட்டிசெல்வது என்பது என்ன மாதிரியான பண்பு என்பது தெரியவில்லை. இது எச்சரிக்கையும், விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டிய தருணம். அரசியலைக்கடந்து அன்றாடங்காய்ச்சிகளை நினைத்துப்பாருங்கள். கள்ளிசெடியை ஒழிக்க முள்ளுச்செடியா? இன்று கள்ளிச்செடியும், முள்ளுச்செடிகளுமே காடாகி தமிழ்நாட்டை மறைத்துள்ளது.
“சாராயத்தை குடித்தால் காராளனும் கடைமகன் ஆவான்” என்பது பழமொழி. இதனை எல்லாத்தரப்பும் சிந்திக்கணும். இதற்காக வழங்கப்படும் தொகை என்பது அவமானம்தான் என்றாலும் ஏழை எளியோருக்கு செல்வதில் ஆறுதல்தான். எங்கள் சார்பிலும் ஆயிரம் ரூபாய் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்புகிறோம். நல்ல சாராயமும், கள்ளசாராயமும் மட்டுமே வருவாய் என்றால் இதோ எங்கள் நியாயமான உழைப்பில் வந்த நல்ல பணம் ஆயிரம் ரூபாயை வைத்தாவது அரசு தனது அவமானத்தை துடைத்துக்கொள்ளட்டும் என்று அனுப்பி வைத்திருக்கிறோம். கள்ளச்சாராய உயிரிழப்பிற்கு மெத்தனால்தான் காரணம் என்று அறிவித்துவிட்டு ‘டாஸ்மாக்’ விஷயத்தில் மெத்தனமாக இருந்துவிட்டால் இனிவரும் காலங்களில் குடியின் கொடூரம் தலைவிரித்தாடி மொத்த மொத்தமாக உயிரிழப்புகளை தமிழகம் சந்திக்க நேரிடும். “ என்றார் சற்று காட்டமாக.
-ஆர்.விவேக் ஆனந்தன்.