சேலம் கோட்ட அளவில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெறும் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக நாமக்கல் மாவட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சங்கம் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து முறையான விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்ததாரர் சங்கத்தினர் காவேரி வடிநிலவட்டம் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் ‘தற்போது சேலம் கோட்டத்தில் கால்வாய்கள் தூர்வாரும் பணிக்காக ரூபாய் இரண்டு கோடியே 50 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தம் எந்தவித முறையான அறிவிப்பும் இன்றி ரகசியமாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து ஒப்பந்ததாரர் சங்கத்தினர் கூறுகையில், ‘முதல்நிலை கண்காணிப்பு பொறியாளரிடம் முறைகேடு குறித்து நாங்கள் கேட்ட விளக்கத்திற்கு முறையாக பதில் அளிக்கவில்லை’ என்று தெரிவித்தனர்.