திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, அமையநாயக்கனூர் பேருராட்சி 10வது வார்டு மாவூத்தன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா. இவரது கணவரின் அண்ணன் மகன் மணிகண்டன் (35).
மாற்றுத்திறனாளி மணிகண்டனால் பேச முடியாது என்பதோடு நடக்கவும் முடியாது. காப்பகத்தில் பாதுகாப்பாக இருந்து வந்த மணிகண்டனுக்கு தமிழக அரசின் மாத உதவித்தொகை வந்துள்ளது. மேலும் அவருக்கு சொந்தமாக காலி இடமும் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மணிகண்டனுக்கு கிடைத்து வரும் மாத உதவித்தொகை மற்றும் காலி இடத்தை அபகரிக்க திட்டமிட்ட சந்திரா காப்பக நிர்வாகிகளை சந்தித்து மணிகண்டனை பாதுகாத்து பராமரிக்கப் போவதாக பொய் சொல்லி தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
ஆனால் வீட்டுக்கு அழைத்து வந்த சில தினங்களில் மாற்றுத்திறனாளி மணிகண்டனை தினந்தோறும் குச்சியால் அடித்து சந்திரா சித்ரவதை செய்து வந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி இளைஞர்கள் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து அம்மையநாயக்கனூர் காவல் நிலைய அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை பார்த்த பலரும் ‘அந்த பெண்ணிடம் மனிதநேயம் மரித்துப்போனதா?’ என கேட்டு விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘மாற்றுத்திறனாளி மணிகண்டன் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அம்மையநாயக்கனூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.