" தென் திருப்பதி " என பக்தர்களால் போற்றப்படும் துறையூர் பெருமாள்மலையில், பிரமோற்சவ விழாவின் தொடக்க நிகழ்ச்சி கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம், துறையூரில் " தென் திருப்பதி " என பக்தர்களால் போற்றப்படும் பெருமாள்மலையில் , மேலே சென்று பெருமாளைத் தரிசனம் செய்வதற்காக சுமார் 5 கி.மீ தூரம் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளது.
எப்போதாவது விழா நடக்கும் சமயத்தில் பக்தர்கள் மட்டும் பயன்படுத்தும் பாதை தானே, என்று சுமாரான தரத்தில்தான் அந்த சாலை போடப்பட்டுள்ளது.
அதுவும் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மலையில் பாறைகள் உருண்டு சாலையின் பக்கவாட்டின் அருகில் எந்நேரமும் அடுத்த சுற்றின் கீழ் உருளக் கூடிய அபாயத்தில் உள்ளது. இதனால், கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனத்தில் மரண பயத்துடனேயே பக்தர்கள் மேலே சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
மலை மீதுள்ள பெருமாள் கோவிலின் மூலஸ்தான கோபுர கலசம் சாய்ந்தவாறு உள்ளது. கடந்த ஒரு வருட காலமாக சாய்ந்த நிலையில் உள்ள கோபுர கலசத்தை இது வரையிலும் சீர்படுத்தாமல் உள்ளனர்.
அடிவாரத்தில் ஏழை எளிய மக்கள் பக்தர்கள் உள்ளிட்டோர் பசியாறிக் கொண்டிருந்த அன்னதானத் திட்டத்தையும் கடந்த சில மாதங்களாக மலை மேல் உள்ள கோவிலின் மண்டபத்தில் கோவில் நிர்வாகம் மாற்றிவிட்டதால் வயதான ஏழை, எளிய மக்கள் மலைமேல் சென்று உணவருந்த முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
மேலும், மலைமேல் நடக்கும் அன்னதானத்தில் தினமும் ஒரு சில பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்வதாகவும், மீதமுள்ள உணவை மலையில் சுற்றித் திரியும் குரங்குகளுக்கு போட்டு விடுவதாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திருக்கோவில் அன்னதானத் திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் கோயில் நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், பெருமாள் மலை அடிவாரத்தில் துறையூர் பெரம்பலூர் செல்லும் சாலை விரிவாக்கம் செய்தனர்.
அப்போது, இடிக்கப்பட்ட கோவிலின் நுழைவு வாயில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கட்டப்படாமலும், சாலையில் பயணிப்போர் வணங்கிச் செல்லக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்த பெருமாள் பாதத்தையும் இன்னும் அமைக்காமலும் இருப்பது பக்தர்களின் வேதனையை அதிகப்படுத்தி உள்ளது.
- திருச்சி ஷானு