பள்ளி விடுமுறைக்காலம் என்பதால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தோளில் பையுடன், கையில் குழந்தைகளுடன் மக்கள் தாங்கள் செல்லும் பேருந்துகளைத் தேடிப்பிடித்து அதில் ஏறி இடம் பிடிக்க ஆலாய் பறக்கின்றனர். இதில் ‘ஒரு மணி நேரமாய் நிற்கிறோம். ஒரு பஸ்ஸையும் காணோம்’ என்ற புலம்பல்கள் வேறு ஆங்காங்கே கேட்கிறது. இப்படி நாகை, மயிலாடுதுறை, சீர்காழி பேருந்து நிலையங்களில் பரிதாபப்புலம்பல்கள் அதிகமாய் கேட்பதோடு பொதுமக்கள் கொதித்துப்போய் சாலைமறியல் போராட்டங்களிலும் இறங்க இது தொடர்பாகப் பயணிகளிடம் விசாரித்தோம்.
“முன்பெல்லாம் நாகையிலிருந்து சிதம்பரம் செல்ல அரைமணி நேரத்திற்கு ஒரு பேருந்தும், அல்லது சீர்காழியிலிருந்து மயிலாடுதுறை செல்ல பத்து நிமிடங்களுக்கு ஒரு பேருந்து என்றபடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் வந்து சென்று கொண்டிருக்கும். ஆனால் இப்போதெல்லாம் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் எனக் காத்திருக்கவேண்டியுள்ளது. மிகக்குறைந்த அளவு அரசுப் பேருந்துகளே இயக்கப்படுவதுபோல் தனியார் பேருந்துகள் மட்டும் ஏறவே முடியாத அளவிற்கு அதிக கூட்டத்துடன் அவ்வப்போது வந்து செல்கிறது. போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்டால் ‘வரும்’ என்றபடி ஒன்றை வார்த்தைகளால் பதில் கூறிவிட்டு அமைதியாகிவிடுகின்றனர். கோடை வெயிலில் மூட்டை முடிச்சுகளுடனும், குழந்தை குட்டிகளுடனும் பஸ்ஸுக்காக காத்திருப்பது என்பது எத்தனை கொடுமை என்பது? அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். பகலில் இப்படியென்றால் இரவு நேரத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதே இல்லை. ஒரு சில தனியார் பேருந்துகள் இதனைப் பயன்படுத்தி வழக்கத்தைவிட அதிக கட்டணத்துடன் இயங்குகிறது. ஏற்கனவே இயக்கப்பட்டுவந்த பேருந்துகள் அனைத்தும் எங்கே போனது? இந்த கேள்விக்குப் பதில் சொல்வார் யாரும் இல்லை. நாங்கள் கஷ்டப்படவேண்டும் என்பது எங்கள் தலையெழுத்து’ என்றனர் சோகக்குரலில்.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர், “உண்மைதான் சார். ஒவ்வொரு போக்குவரத்துக்கழக பணிமனையிலும் 20லிருந்து 40 பேருந்துகள் இயக்கப்படாமல் அப்படியே நிற்கிறது. அந்த பேருந்துகளை இயக்க டிரைவர்கள் இல்லை. அவர்கள் எல்லோரும் ஓய்வு பெற்றுவிட்டார்கள். அதன் பிறகு அவர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.. அரசோ, பொதுமக்களின் கஷ்டத்தைக் கருத்தில் கொள்ளாமல் ‘சம்பளம் மிச்சம், டீசல் மிச்சம்’ என்றபடி இருக்கிறது. நாங்களும் இது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம்.” என்றார் பெயரைத் தவிர்த்தபடி.
இந்த பிரச்னை குறித்து நேற்று நாகை வந்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், “கலைஞரின் கனவுத்திட்டமான மினி பஸ்களை கிராமம் தோறும் இயக்க அந்த சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அத்துடன் போக்குவரத்துத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. அதன் படி முதலில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும். விரைவில் நிலைமை சரிசெய்யப்படும்.” என்றார்.
-ஆர்.விவேக் ஆனந்தன்