ஜான் பாண்டியனின் போஸ்டரை கிழித்து எறிந்ததால் இரு சமூகத்தினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் விதமாக 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம், மேலப்பாவூர் காலனியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் வாழ்கிறார்கள். பக்கத்தில் தேவர் சமுதாய மக்கள் மெஜாரிட்டியாக வசிக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் ஏழாம் பொருத்தம். கடந்த 2ம் தேதி காலனியில் உள்ள முப்புடாதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
இதற்காக அவரை வரவேற்று மக்கள் ஊர் முழுவதிலும் போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். இரவு நேரத்தில் அங்கு வந்த தேவரின இளைஞர்கள் சிலர் ஜான் பாண்டியன் போஸ்டரை கிழித்து எறிந்ததோடு நில்லாமல், போஸ்டரில் சாணத்தை கரைத்து ஊற்றியிருக்கிறார்கள். அதிகாலையில் எழுந்து இதைப் பார்த்த காலனி மக்கள் அத்திரமடைந்துள்ளனர். போஸ்டரை அவமானப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
இந்த விஷயம் ஜான் பாண்டியனுக்குத் தெரிவிக்கப்படவே, அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார். இதனால், அப்பகுதியில் தேவர்-தேவேந்திரர் இரு தரப்பு மோதல் உருவாகும் சூழல் எழுந்தது. இதனைத் தொடர்ந்து எஸ்.பி சாம்சன், 6 டி.எஸ்.பிக்கள், 12 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 150 போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். என்றாலும், தேவேந்திர குல மக்கள் ஜான் பாண்டியனிடம் முக்கிய சாலையில் கொடியேற்றச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் கொடியை ஏற்றி விட்டு வந்து விட்டார். ஆனால், தேவர் சமுதாய மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே போலீசார் கொடியை அகற்றி விட்டார்கள். இதனால், கடுப்பான தேவேந்திர குல மக்கள் மறுபடியும் சாலை மறியலில் ஈடுபடவே, போலீசார் வந்து சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். என்றாலும் பிரச்சினை நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது.
-துரை சாமி