தென்காசியில் கொடியேற்றியது தொடர்பாக இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம், மேலப்பாவூரில் முப்பிடாதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் சாமி கும்பிட தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜாண் பாண்டியன் வந்தார். அவர் சாமி கும்பிட்டு விட்டு அங்கேயே தமிழக மக்கள் முன்னேற்றக் கழகக் கொடியையும் நாட்டினார். இந்தச் சம்பவம் அங்கு மெஜாரிட்டியாக வாழும் மாற்று சமுதாயத்தினருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் ஜான் பாண்டியனை வரவேற்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அசிங்கப்படுத்தினர். அவரால் ஏற்றப்பட்ட கொடியை காவல்துறையினர் அகற்றினர்.
இதனால் தேவேந்திரர் சமுதாயத்திற்கும் மாற்று சமுதாயத்தினருக்கும் மோதல் வெடித்திருக்கிறது. தேவேந்திர குல மக்கள் போஸ்டரை அவமானப் படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும். மீண்டும் கொடியை ஏற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளுடன் கலெக்டரிடம் மனு கொடுத்து இருக்கிறார்கள். இதனை வலியுறுத்தி ஊரில் உண்ணாவிரதமும் தொடங்கி இருக்கிறார்கள்.
இதற்கிடையில் மாற்று சமுதாய மக்கள் ஒன்று திரண்டு கலெக்டரிடம் வந்து சாதி மோதலை உருவாக்கும் ஜான் பாண்டியனை கைது செய்ய வேண்டும் என்று கோரி மனு கொடுத்து இருக்கிறார்கள். அவர்களும் தங்கள் கிராமத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாற்று சமுதாயத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற நேதாஜி சுபாஷ் சேனைத் தலைவர் வக்கீல் மகராஜன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தவிர, இன்னொரு மாற்று சமுதாய அமைப்பு தலைவர் இசக்கி ராஜா மக்களை திரட்டி வருகிறார். இதனால் எந்நேரமும் ஜாதிக்கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நெல்லை மாவட்டச் செயலாளர் கண்மணி மாவீரன் கூறுகையில், ’’தலைவர் போஸ்டர் மீது சாணி அடித்தவர்களை கைது செய்ய வேண்டும். கொடியையும் திரும்ப ஏற்ற வேண்டும். காவல்துறையினர் ஜாதி பார்ப்பதால்தான் எங்கள் கொடி அகற்றப்பட்டிருக்கிறது. கொடி ஏறும் வரை சும்மா இருக்க மாட்டோம்’’என்றார்.
மாற்று சமுதாய தரப்போ ’’எங்கள் ஜாதியைப் பற்றி தவறாக பேசிய ஜான் பாண்டியனை கைது செய்யும் வரை போராடுவோம்’’என்கின்றனர். இரண்டு சமுதாயமும் முறுக்கி கொண்டிருப்பதால் 500க்கும் அதிகமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.