தேனி மாவட்டத்தில், பான்பராக் மற்றும் குட்கா ஆகியவற்றை சப்ளை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பகுதி காவல்துறையினர் அரண்மனை புதூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் அட்டைப்பெட்டியுடன் வந்த நபரை மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது, அந்த அட்டைப்பெட்டியில் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது பிடிபட்ட நபர் பெயர் குமரேசன் என்றும், இவர் தேனி மாவட்டம் முழுவதும் பான்பராக் மற்றும் குட்கா உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்துகளை விற்பனை செய்து வந்தனர்.
இவைகளை கர்நாடக மாநிலத்தில் இருந்து மொத்தமாக வாங்கி, தேனி மாவட்டம் முழுவதும் சப்ளை செய்து வருவதும் தெரிய வந்தது.
மேலும், தடை செய்யப்பட்ட பொருட்களை பழனி செட்டிபட்டி பகுதியில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் மறைத்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, அங்கு பெட்டிபெட்டியாக மறைத்து வைத்திருந்த போதை வஸ்துகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், குமரேசனுக்கு உடந்தையாக அவரது கடையில் பணிபுரிந்த முத்து என்பவரும் உடந்தையாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஏற்கனவே, குமரேசன் மீது போதை வஸ்து கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தேனி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.