தேனியில் வீட்டில் மான் கொம்பை பதுக்கி வைத்திருந்த சாமியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வீட்டின் உரிமையாளர் வனத்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் உள்ள கணபதி அக்ரஹாரத் தெருவை சேர்ந்தவர் சௌந்தரராஜன். இவரது வீட்டில் முருகன் என்பவர் நீண்ட காலமாக வசித்து வருகிறார். தன்னை சித்தர் என்று கூறிக் கொள்ளும் முருகன் வாடகை வீட்டில் சித்தர் குடில் என்று பலகை வைத்து இரவு நேரத்தில் சங்கு ஒலித்து அப்பகுதி மக்களுக்கு இடையூறு செய்து வந்துள்ளார். வாடகை வீட்டில் மாந்திரீக பூஜை, நிர்வாண பூஜைகள் செய்வதாகும், இதைக் கேட்கச் சென்ற வீட்டின் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று இவர் மீது குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில், இன்று மாலை முருகன் ஒரு நபருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து தான் தங்கி இருந்த வீட்டில் இருந்த மான் கொம்பை துணியால் கட்டி, அதனை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார்
இதனை கண்ட வீட்டின் உரிமையாளர் தேனி, மேகமலை வனகோட்ட புலிகள் காப்பக வனத்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட வனத்துறையினர் மான்களை வேட்டையாடி அதன் கொம்பை பதுக்கி வைத்திருந்த சித்தர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மான் கொம்பையும் பறிமுதல் செய்தனர்.