துடைப்பத்தைச் சாக்கடையில் நனைத்து தாக்கிக்கொள்வதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும் என்கிற நம்பிக்கையில் ஆண்டிப்பட்டி அருகே உறவினர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் விநோத திருவிழா நடைபெற்றது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா 3 நாட்கள் கொண்டாப்படும்.
இந்தத் திருவிழாவில் முதல் இரண்டு நாட்களில் வழக்கமாகத் திருவிழாக்களில் நடத்தப்படும். பொங்கல் வழிபாடு, முளைப்பாரி, தீச்சட்டி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் கடைசி நாள் கோவில் திருவிழாக்களில் கிராமத்தில் உள்ள மக்கள் தங்களின் மாமன், மைத்துனர்கள் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றி கொண்டாடுவார்கள். ஆனால், மறவப்பட்டி கிராமத்தில் விழாவின் கடைசி நாளில் அந்தக் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் வினோதமான நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவிழாவின் கடைசி நாளில் நடத்தப்படும் வினோத நிகழ்ச்சி இன்று அரங்கேறியது. அந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் தங்களின் மாமன் மைத்துனர்களைத் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. அடிப்பதற்கு முன்பாகத் துடைப்பத்தைச் சாக்கடை நீரிலும், சேறு மற்றும் சகதியில் நனைத்துக் கொண்டு மாமன், மைத்துனர்கள் மீது ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டனர்.
மேலும் சிலர் சேற்றிலும், சகதியிலும் படுத்துக்கொண்டு தங்கள் உறவினர்களிடம் துடைப்பத்தால் அடிவாங்கிக் கொண்டனர். இந்த வினோதமான இந்தத் திருவிழாவை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர். துடைப்பத்தைச் சாக்கடையில் நனைத்து தாக்கிக்கொள்வதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும் என்றும் அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். மேலும் நீண்டநாள் பிரிந்த வாழும் உறவுகள் திருவிழாவின் போது துடைப்பத்தால் அடித்துக்கொள்வதால் அவர்களுக்கிடையே மீண்டும் உறவு வளரும் என்றும் கூறுகின்றனர்.