தேனி: மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ‘அரிகொம்பன்’ யானை

யானையை பயிற்சி முகாமில் விடக்கூடாது என்று கேரள நீதிமன்ற உத்தரவிட்டுள்ளதால் அதிலும் சிக்கல் இருக்கிறது
பிடிபட்ட அரிகொம்பன்
பிடிபட்ட அரிகொம்பன்

கடந்த சில நாட்களாக தேனியில் உலா வந்த அரிக்கொம்பன் யானை வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

கேரள மாநிலம் மூணாறு, சின்னகானல் பகுதியில் 10க்கும் மேற்பட்டோரைக் கொன்றும், நூற்றுக்கும் மேற்பட்ட ரேசன் கடைகள், டிப்பார்டமெண்ட் ஸ்டோர்களை உடைத்தும் அரிசி சாப்பிட்டு வந்தது அரிகொம்பன் யானை. கேரள பகுதியில் சுற்றித்திரிந்த இந்த யானையை கேரள வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்த நிலையில் தமிழக கேரள எல்லையில் தேக்கடி வனப்பகுதியில் விட்டனர். அரிசி சாப்பிடும் பழக்கம் உடைய இந்த யானை, அடுத்த சில நாட்களில் தமிழ் நாட்டிற்குள் புகுந்து மேகமலை தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்தியதோடு அரசு பஸ்சையும் தாக்கியது. இதனால் அப்பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்தநிலையில் கடந்த 27-ந்தேதி தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் புகுந்த அரிகொம்பன் யானை, ஈ.பி அலுவலக பாதை வழியாக கூலத்தேவர் முக்கு, ந்ந்தகோபலன் கோயில் பகுதியில் வீட்டு பகுதியில் அங்கும் இங்கு ஓடியது. மக்கள் அலறியடித்து ஓடினர். காவலாளி ஒருவர் அரிக்கொம்பன் யானையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம் தேனி கம்பம் பகுதிக்கு 144 தடை உத்தரவையும் போட்டது. வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் யானையை காட்டுக்குள் அனுப்ப பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டனர்.

இந்த யானையை பிடிப்பதற்காக சுயம்பு, உதயன், அரிசி ராஜா (எ) முத்து ஆகிய 3 கும்கி யானைகள் கோவை மாவட்டம் டாப் சிலிப்பில் இருந்து லாரி மூலம் தனித்தனியாக கொண்டுவரப்பட்டன. பின்னர் அவை கம்பத்தில், கூடலூர் சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள புளியந்தோப்பில் நிறுத்தப்பட்டிருந்தன. அங்கு கும்கி யானைகளை பார்ப்பதற்காகவும், அதனுடன் புகைப்படம் எடுத்து கொள்வதற்காகவும் பொதுமக்கள் குவிந்ததையடுத்து கும்கி யானைகள் கம்பம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு 3 கும்கி யானைகளும் தனித்தனியாக நிறுத்தப்பட்டு பாகன்களால் பராமரிக்கப்பட்டு வந்தது.

முன்னதாக கம்பம் பகுதியில் ஓடித்திரிந்த அரிகொம்பன்
முன்னதாக கம்பம் பகுதியில் ஓடித்திரிந்த அரிகொம்பன்

அரிகொம்பன் யானை உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகநாதர் கோவில் வனப்பகுதியில் சுற்றித்திரிவதாக கூறப்பட்டு வந்த நிலையில் அந்த யானை வனத்துறையினரிடம் சிக்காமலே இருந்து வந்தது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திய பிறகு தான் கும்கி யானைகளுக்கு வேலை என்பதால் கும்கி யானைகள் கடந்த சில நாட்களாக கம்பம் வனத்துறை அலுவலகத்திலேயே இருந்தன. கும்கி யானையுடன் பாகன்கள் மற்றும் வனத்துறையினரும் இருந்தனர். இந்நிலையில் கம்பம் அருகே 7 நாட்களாக உலா வந்த அரிக்கொம்பன் யானை பிடிபட்டுள்ளது. தேனி சின்னமனூர் அருகே உலா வந்த அரிகொம்பன் யானையை வனத்துறையினர் 2 மயக்க ஊசிகள் செலுத்தி பிடித்தனர். மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், லாரி மூலம் அரிக்கொம்பன் யானை கொண்டு செல்லப்படுகிறது.

பிடிபட்டுள்ள அரிகொம்பன் தேனி மாவட்டத்தில் உள்ள வெள்ளி மலை என்ற இடத்தில் விடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அங்கு விட்டால் யானை தேனி மாவட்டத்திற்குள் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. யானையை பயிற்சி முகாமில் விடக்கூடாது என்று கேரள நீதிமன்ற உத்தரவிட்டுள்ளதால் அதிலும் சிக்கல் இருக்கிறது. எனவே இந்த யானையை எங்கு விடுவது என்ற குழப்பம் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், யானையை எங்கு விடவேண்டும் என்பது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர் வனத்துறையினர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com