‘தீரன்’ பட பாணியில் மதுரையில் கொள்ளை - 13 ஆண்டுகள் கழித்து குஜராத்தில் சிக்கிய திருடன்

‘தீரன்’ படத்தில் வரும் காட்சிகளைப் போல தமிழ்நாட்டிற்கு வந்து பூட்டியுள்ள வீடுகளை நோட்டம் பார்த்து கொள்ளையடித்து வந்துள்ளார்.
குஜராத் கொள்ளையன்
குஜராத் கொள்ளையன்

13 ஆண்டுகளுக்கு முன் கொள்ளையடித்து தப்பிய குற்றவாளிகளை தீரன் சினிமா பட பாணியில் தேடிப்பிடித்து மதுரை அவனியாபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை, அவனியாபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மல்லிகை தனி வீடுகள் பகுதியில் உள்ள பூட்டிய வீட்டில் கடந்த  2010ம் ஆண்டு 33 சவரன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தாகூத் மாவட்டம், மோதிலட்சி கிராமத்தைச் சேர்ந்த சத்ரசிங் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் தற்போது மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவின்பேரில் காவல் துணை ஆணையர் மேற்பார்வையில், அவனியாபுரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் குஜராத் மாநிலம் சென்று சத்ரசிங்கை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குற்றவாளி தனது கூட்டாளிகளுடன் ‘தீரன்’ படத்தில் வரும் காட்சிகளைப் போல தமிழ்நாட்டிற்கு வந்து பூட்டியுள்ள வீடுகளை நோட்டம் பார்த்துக் கொள்ளையடித்து வந்துள்ளார். பின்னர் நகைகளுடன் குஜராத் சென்று கூட்டாளிகளுடன் பிரித்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ள அவர் மீது தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சத்ரசிங் அவனியாபுரம் காவல் துறையினரால் 13 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படையினருக்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com