டியர் ஆஃபீஸர்ஸ்... இதுதானா உங்க டக்கு? - கோவை கதகதப்பு

ஆலோசனை கூட்டம் சரியான டைம்லதான் நடந்திருக்குது, கால தாமதமாகவெல்லாம் நடத்தப்படல.
விநாயகர் சிலை தயாரிக்கும் பணி
விநாயகர் சிலை தயாரிக்கும் பணி

”விடிஞ்சா கல்யாணம்! ஆனா ‘ஏதாச்சும் பொண்ணு கிடைச்சுதா?’ன்னு கேட்டாக்க எப்படியிருக்கும்? அப்படித்தான் இருக்குது விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு விஷயத்துல கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸின் முன்யோசனை நடவடிக்கைகள்!” என்று கடுப்பு பாதி கலாய்ப்பு மீதியாக பேசுகிறார்கள் கோவை மாவட்ட இந்து அமைப்புகள்.

ஏன்?

அதாவது விநாயகர் சதுர்த்தி விழா உலகெங்கும் எதிர்வரும் 18ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. ஆக இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில் இந்தியாவில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதமாகியுள்ளன. ஏனென்றால், விநாயகர் சதுர்த்தியை மிகப்பெரிய சிலைகளை வைத்து விமரிசையாக கொண்டாடுவது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள இந்து அமைப்புகளின் வழக்கம். அதேவேளையில் விநாயகர் சதுர்த்தி சிலைகள் அமைப்பு, கொண்டாட்டம், அவற்றை கரைப்பதற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் தருணம் ஆகியவற்றின் போது பல மத மோதல்களை சந்தித்துள்ளது இந்த தேசம். அதனால்தான் விநாயகர் சதுர்த்தி வருகிறதென்றாலே பாதுகாப்பு பலப்படும்.

இந்தியாவில் காஷ்மீர், மும்பைக்கு அடுத்து தமிழகத்தில் கோவை மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி கால பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருக்கும்.காரணம், கோவையில் மிக கடுமையான மத மோதல்கள் நடைபெற்றுள்ளதுதான். கடந்த வருடம் கூட சிட்டியின் மையத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கார் வெடிகுண்டு வெடித்து ஒருவர் பலியானார். அதனால் சதுர்த்தி காலங்களில் கோவை பாதுகாப்பு கெடுபிடி சங்கடத்தில் நெளியும்.

அந்த வகையில் இந்த ஆண்டும் பாதுகாப்பு நடைமுறைகளை துவக்கிவிட்டனர். அதன் ஒரு நிலையாக கடந்த 8ம் தேதியன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பான சட்ட ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், எஸ்.பி. பத்ரிநாராயணன், டி.ஆர்.ஓ. ஷர்மிளா உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்து வந்த அமைப்பினர் சிலர் “விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் பத்து நாள் கூட இல்லை. மாவட்டத்துல விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் எப்பவோ ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 90% முடிஞ்சிருச்சு. இறுதி கட்ட பணியான வர்ணம் தீட்டுவது மாதிரியான வேலைகள்தான் நடந்திட்டிருக்குது. ஆர்டரின் பேர்ல பல பிரம்மாண்ட மற்றும் லேட்டஸ்ட் விஷயங்களுடனான விநாயகர்கள் தயாராகி நிற்கிறாங்க.

ஆனால் இப்பதான் இந்த அதிகாரிகள் எங்களை அழைச்சு ‘சிலைகளின் உயரம் தரைத்தளத்தில் இருந்து பத்து அடிக்கு மிகாமல் இருக்கணும், சிலைகள் தூய களிமண்ணில் பண்ணப்பட்டிருக்கணும், பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களால் வர்ணம் பூசப்பட்ட சிலைகள் பயன்படுத்த கூடாது!ன்னு பல அறிவுரைகளை சொல்றாங்க. எத்தனையோ இடங்கள்ள சிலைக்கு ஆர்டர் கொடுத்து, தயாரிச்சும் முடிச்ச பிறகு இவங்க ரூல்ஸ் போட்டால் எப்படி மாத்துறது? சதுர்த்தி விழா பாதுகாப்பாகவும், சட்ட ஒழுங்கு பிரச்னை இல்லாமலும், மாசு விளைவிக்காமலும் நடக்கணும் அப்படிங்கிறதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பாதுகாப்பான சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்புக்கு நாங்கள் தயாரா இருக்கிறோம். ஆனால் ரூல்ஸ் போடுறவங்க அதை சீக்கிரம் செய்திருக்கலாம். இதுதானா இவங்க டக்கு?!

பத்து அடிக்கு கொஞ்சம் அதிகமான உயர சிலைகளை ஆர்டர் கொடுத்தவங்க கூட இப்ப அதை மாத்த வேண்டிய நிலை. கேன்சல் பண்ணவும் முடியாது, எடுத்துட்டு வந்தால் போலீஸ் பிரச்னை. இந்த கஷ்டம் தேவையா?” என்கிறார்கள்.

அதிகாரிகள் தரப்போ “இந்த ஆலோசனை கூட்டம் சரியான டைம்லதான் நடந்திருக்குது, கால தாமதமாகவெல்லாம் நடத்தப்படல. இந்த ரூல்ஸெல்லாம் எப்பவும் இருக்க கூடியதுதான். எல்லாமே எல்லா தரப்பு மக்களின் நலன், நிம்மதி, பாதுகாப்பு, சந்தோஷத்துக்காக தான் பண்றோம். கோவையில் சதுர்த்தி விஷயங்கள் பாதுகாப்போடு நடந்து முடியும்ணு நம்புறோம்” என்றார்கள்.

அப்படியே ஆகட்டும்!

- ஷக்தி

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com