வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் உள்ள தோளப்பள்ளியில் போலி சாதிச் சான்று கொடுத்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சிமன்ற தலைவரின் சாதி சான்றிதழை ரத்து செய்து நடவடிக்கை எடுத்ததற்கான உத்தரவை அவரது வீட்டின் கதவில் அதிகாரிகள் ஒட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடந்த 2021ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் சுரேஷ் என்பவரின் மனைவி கல்பனா என்பவர் பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவர் பட்டியலின பிரிவைச் சார்ந்தவர் இல்லை! என்று இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாக்கியராஜ் என்பவர் கலெக்டர், தேர்தல் கமிஷன் மற்றும் ஊரக வளர்ச்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில், " தோளப்பள்ளி ஊராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்பனா எஸ்.சி பிரிவைச் சேர்ந்தவர் இல்லை. இவர் வேறு பிரிவைச் சேர்ந்தவர். முறைகேடாக எஸ்.சி சான்றிதழ் வாங்கி கொடுத்துத் தேர்தலில் வெற்றி பெற்றதை ரத்து நீக்கம் செய்ய வேண்டும்" எனப் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த் துறையினருக்கு விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கல்பனா கொடுத்த சாதிச் சான்று போலியானது என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து முறைகேடாகப் பெற்ற சாதி சான்றிதழை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
பின்னர் தாசில்தார் உத்தரவின் பேரில், ஆர்.ஐ. விநாயகமூர்த்தி, வி.ஏ.ஓ. குபேந்திரன் மற்றும் கிராம உதவியாளர்கள் நேற்று முன்தினம் தோளப்பள்ளி கிராமத்திற்குச் சென்று சாதி சான்று ரத்து செய்ததற்கான உத்தரவை கல்பனாவிடம் கொடுக்க முயன்றனர். ஆனால், அவர் வீட்டில் இல்லாததால் அதிகாரிகள் சாதிச் சான்று ரத்தான உத்தரவை வீட்டுக் கதவில் ஒட்டி விட்டுச் சென்றனர்.
இது தொடர்பாக ஊராட்சித் தலைவர் கல்பனாவிடம் பேச தொடர்பு கொண்டோம். அவரது கணவர் சுரேஷ் பேசினார். "கல்பனாவை நான் பட்டியலினப்பெண் என்று தெரிந்தே பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் காதல் திருமணம் செய்து கொண்டேன். அவர் சிறுவயதில் இருக்கும் போது அப்பா ஜெயபால், அம்மா ரமணி ஆகியோர் இறந்துவிட்டனர். அதன்பிறகு ஒரு பாட்டி எடுத்து வளர்க்கிறார். அவர்கள் அனைவரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். இதில் எதுவும் முறைகேடு நடக்கவில்லை. கல்பனா ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பட்டியல் இனம் என்றே படித்து வந்திருக்கிறார். கலப்பு திருமண சான்றிதழ் உள்ளது. கல்பனா தெலுங்கு பேசுகிறார் என்பதையும், பழக்க வழக்கங்களை வைத்தும் உறவினர்கள் சிலர் சொல்வதை வைத்தும் நாயுடு சமூகம் என்கிறார்கள். அப்புறம் சான்றிதழ்கள் எதற்கு? இவர் தலைவர் ஆகப்போகிறேன் என்றா ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது பட்டியலின சான்றிதழ் பெற்றார்!
வழக்குத் தொடுத்திருக்கும் பாக்யராஜ் பல ஆண்டுகளுக்கு முன்பே என் மீதும் என் தந்தையார் மீதும் வன்கொடுமை வழக்குத் தொடுத்தார். அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அந்த முன் பகையை வைத்து வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஆனால் தலைவர் பதவி நீக்கம், சாதிச் சான்று ரத்து உட்பட எந்த நடவடிக்கையும் கோர்ட் தீர்ப்பு வரும் வரை எடுக்கக்கூடாது! என்று உயர்நீதிமன்ற தடையாணை பிறப்பித்திருக்கிறது. அப்படியும் ஏன் இந்த நடவடிக்கை என்று விளங்கவில்லை. கோர்ட் தீர்ப்பு வரட்டும், அதற்குத் தலை வணங்குகிறேன்" என்றார்.
மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியனிடம் பேசினோம். ’அவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என விசாரித்து அறிக்கையைக் கொடுத்திருக்கிறோம். தலைவர் பதவியைப் பொறுத்தவரையில் பஞ்சாயத்து விதி 178ன் படி அரசுதான் நீக்கமுடியும்.’ என்றார்.
எது உண்மை என்பதை கோர்ட் தான் சொல்ல வேண்டும்!
-அன்புவேலாயுதம்