கிறிஸ்தவ ஆலயத்தில் மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம்.. ஸ்கேனிங் ரிப்போர்ட்

கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் மூன்றாவது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம், தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டலத்தில் பரபரப்பு
மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தை கண்டித்து தூத்துக்குடி வட்டக்கோவில் ஆலய மக்கள் மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது திருமண்டல கிறிஸ்தவ மக்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சிஎஸ்ஐ கிறிஸ்தவ திருமண்டலங்களை நிர்வாகம் செய்ய மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டலத்துக்கு கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் நடந்தது. டிஎஸ்எப் அணியைச் சார்ந்தவர்கள் ஒரு தரப்பாகவும், எஸ் டி கே ராஜன் அணியைச் சேர்ந்தவர்கள் இன்னொரு தரப்பாகவும் தேர்தலில் எதிரெதிர் துருவமாக போட்டியிட்டனர்.

கிறிஸ்தவ மக்களை தவிர இரு அணியினரும் போட்டி போட்டு பரிசு பொருட்களைக் கொடுத்தனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை கொத்துக் கொத்தாக நீக்குவதாக ஆங்காங்கே எதிர்ப்பு எழுந்தது. பல ஊர்களில் போராட்டம் நடந்தது. இப்படி பல்வேறு போராட்டங்களுக்கு இடையே நடந்த தேர்தலில் டிஎஸ்எப் அணியினர் வெற்றி பெற்று நிர்வாகத்தை கைப்பற்றினர்.

கிறிஸ்தவ ஆலயத்தில் உள்ளிருப்பு போராட்டம்
கிறிஸ்தவ ஆலயத்தில் உள்ளிருப்பு போராட்டம்

அதைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து டி.எஸ்.எப் அணியினர் பதவி ஏற்றுக் கொண்டனர். அந்த நிலையில் திருமண்டலத்தில் பணியாற்றும் பாதிரியார்களின் வயது வரம்பை 70 ஆக உயர்த்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு தமிழகம் முழுவதும் உள்ள திருமண்டலங்களின் ஆதரவு தேவை. மக்களின் ஆதரவை பெற பேராயர்கள் ஒவ்வொரு திருமண்டலத்துக்கும் சென்று மக்களின் ஆதரவை கோரினர். தூத்துக்குடி வந்தவர்களை இங்கு உள்ள கிறிஸ்தவ மக்கள் விரட்டி அடித்தனர்.

அதை மனதில் கொண்டு தூத்துக்குடி வட்ட கோயில் சபையின் செயற்குழு உறுப்பினராக இருக்கும் ஜான்சனை பதவி நீக்கம் செய்தனர். அவரோடு சேர்ந்து ஆறு பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதே போல பல ஆலயங்களில் இந்த பணி நடந்தது. இந்த நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக தேர்தலில் போட்டியிடாத சிலரை பதவிக்கு கொண்டு வந்தனர்.

தொடரும் உள்ளிருப்பு போராட்டம்
தொடரும் உள்ளிருப்பு போராட்டம்

இது கிறிஸ்தவ மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுதான் தூத்துக்குடி வட்ட கோயிலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த காரணமாகிவிட்டது. இன்று மூன்றாம் நாளாக உள்ளிருப் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டம் நடக்கும் மக்களுக்காக தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பகுதிகளிலிருந்து ஏராளமானவர்கள் வந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இரண்டு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கைக்காக காத்திருக்கிறார்கள்.

"தேர்தலில் போட்டியிடாத ஒருவரை அதுவும் போட்டியிட்டால் நிச்சயமாக வெற்றி பெற முடியாத ஒருவரை எப்படி இவர்கள் பதவிக்கு கொண்டு வரலாம். இது அப்பட்டமான பழி வாங்கும் நடவடிக்கை. இதை அனுமதித்தால் அவர்கள் திருமண்டலம் முழுக்க இதையே செய்வார்கள். என்றும் ஒரு வருட காலத்தில் தேர்தல் வர இருக்கிறது. எனவே தங்களை எதிர்ப்பவர்களை இவ்வாறு பதவி நீக்கம் செய்து போட்டி இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதை கிறிஸ்தவ மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்" என்கிறார் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜான்சன்.

கண்டன போஸ்டர்
கண்டன போஸ்டர்

இதற்கு திருமண்டல நிர்வாகம் என்ன சொல்கிறது? திருமண்டல மேனேஜர் பிரேம்குமார் ராஜா சிங்கிடம் கேட்டோம். "திருமண்டலத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை பதவி நீக்கம் செய்ய நிர்வாகத்திற்கு அதிகாரம் இருக்கிறது. தூத்துக்குடி வருகை தந்த திருமணேடலத்தின் பிரதமர் பேராயரையே ஒருமையில் பேசி விரட்டியவர்கள் இவர்கள். அதனாலேயே அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதை மறைத்து விட்டு மக்களை தூண்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் கடைசியில் நியாயமே வெற்றி பெறும்" என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com