தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை, விவசாயி. இவரது மகன் பெயர் அசோக் குமார் 29 வயது. தென்காசி கோர்ட்டில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். கடந்த 29ம் தேதி வழக்கறிஞர் அசோக் குமார் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். வெளியில் அவரது பெரியப்பா துரைராஜ் உள்ளிட்டோர் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது வழக்கறிஞர் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் குழந்தைப் பாண்டியின் மகனும், ராணுவ வீரருமான சுரேஷ் (27 வயது) அரிவாளுடன் ஓடி வந்திருக்கிறார். வாசலில் நின்று கொண்டிருந்த துரைராஜை சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருக்கிறார். பின்னர் வீட்டுக்குள் ஒடிப்போய் தூங்கிக் கொண்டிருந்த வக்கீல் அசோக் குமாரையும் சரமாரியாக வெட்டியிருக்கிறார். தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்திருக்கிறது. அதன் பின்னர் ராணுவ வீரர் சுரேஷ் அங்கிருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார். இந்த இரட்டைக் கொலை நெட்டூர் கிராமத்தையே உலுக்கியிருக்கிறது.
இதற்கு காரணம் என்ன என்று சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷீடம் கேட்டோம். அவர் கூறுகையில், ’’வழக்கறிஞர் அசோக் குமாரும், ராணுவ வீரர் சுரேஷீம் உறவினர்கள்தான். இருவருக்கும் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் நிலம் இருக்கிறது. அதில் தனது இடத்தை ஆக்கிரமித்திருக்கிறார் வக்கீல் என்று ராணுவ வீரர் கூறுகிறார். இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடக்கும்.
கடந்த வாரம்தான் காஷ்மீரிலிருந்து திரும்பிய ராணுவ வீரர் சுரேஷூக்கும், வழக்கறிஞர் அசோக் குமாருக்கும் இடையே திடீரென நிலத்தகராறு ஏற்படவே டென்சனான ராணுவ வீரர் இரண்டு பேரையும் கொன்று விட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார். இது தொடர்பாக, ராணுவ வீரரின் தந்தை குழந்தைராஜ், உறவினர்கள் மகராஜன், குமார் ஆகியோர்களை கைது செய்திருக்கிறோம்’’ என்றார்.