கேரளாவில் கள்ளசாராய தேடுதல் வேட்டைக்கு சென்றபோது ஆயிரக்கணக்கான கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க போலீசார் தினமும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று காசர்கோடு பகுதியில் உள்ள மூழியார் பகுதிக்கு சென்றனர். அங்கு சந்தேகப்படும் நபர் ஒருவரின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அங்கு ஏராளமான பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை திறந்து பார்த்தபோது அதில் ஏராளமான ஜெலட்டின் குச்சிகள் மற்றும் பயங்கர வெடிமருந்துகள் இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக இதுபற்றி காசர்கோடு வெடிமருந்து தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து வீட்டில் மறைத்து வைத்திருந்த வெடிபொருள்களை கைப்பற்றினர். இதில் 2800 கிலோ ஜெலட்டின் குச்சிகள், 7 ஆயிரம் டெட்டனேட்டர்கள் மற்றும் வெடிபொருள்கள் இருந்தன. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த முஸ்தபா என்பவரையும் போலீசார் கைதுசெய்தனர்.
அவரிடம் விசாரித்தபோது, அவர் ஏற்கனவே குவாரி நடத்தி வந்ததாகவும், இந்த வெடிபொருள்களை குவாரிக்கு விற்பனை செய்ய வைத்திருந்தததாகவும் கூறினார். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாராய வேட்டைக்கு சென்று அங்கு பயங்கர வெடிபொருள்கள் பறிமுதல் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.