திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த நாறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் சசிகுமார்(27). அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு முடிக்காமல் பாதியில் நிறுத்தி விட்டு வீட்டு வேலை செய்துகொண்டிருந்த 16 வயது சிறுமி மீது ஆசை கொண்டுள்ளார். சிறுமியை யாருக்கும் தெரியாமல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் வேட்டவலம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் கைது செய்யப்பட்டார். சசிக்குமாரின் மனைவியும் குழந்தைகளும் கோவித்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சசிகுமார் மனைவி தாய் வீட்டுக்கு போய் விட்ட செய்தி அறிந்து வருத்தப்படாமல், அதன் பிறகும் அந்த சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து வந்து சில நாட்கள் தங்க வைத்து மிரட்டியும், பலவந்தப்படுத்தியும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில் அந்த 16 வயது சிறுமி உடல் நலக்குறைவால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நான்கு மாத கர்ப்பமாக உள்ளார் என்று தெரிவித்தார்கள். அத்துடன் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நிர்மலா, சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர் சசிகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து கண்காணித்து வருகிறார்கள்.
- அன்பு வேலாயுதம்