கேரளாவில் நான்கு மாதம் சம்பளம் வழங்காமல் இருந்தது குறித்து புகார் அளித்த வெளிமாநில தொழிலாளரை கம்பெனியின் மேலாளர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையனூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கட்டுமான நிறுவனம் ஒன்று இந்த சாலை பணிக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ளது.
இந்தநிலையில் இங்கு பணியாற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளிமாநில தொழிலாளர் ஒருவர் ஒப்பந்த நிறுவனத்தின் தலைமை நிலையத்திற்கு புகார் அனுப்பி இருந்தார். இதனை தெரிந்து கொண்ட ஒப்பந்த நிறுவனத்தின் அதிகாரி புகார் கூறிய வெளிமாநில தொழிலாளியை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.