திருச்சியில் பிச்சை எடுப்பவர்களை மீட்கும் பணி தீவிரம்: புலம்பும் பெற்றோர்

பிச்சை எடுப்பவர்களை மீட்க 28 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் சாலையோரத்தில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெற்றோரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தங்கள் பிள்ளைகளை வலுகட்டாயமாக தூக்கி செல்வதாக நரிக்குறவ பெண்கள் கதறுகின்றனர்.

திருச்சி மாவட்டம் மற்றும் மாநகரில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை கண்டறிந்து குழந்தைகள் மீட்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மேற்கொண்டுள்ளார்.

அந்தவகையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தி தலைமையில் குழந்தைகள் நல குழுவினரும் 28 குழுக்களாக பிரிந்து மாநகரில் சாலையோரம் குழந்தைகள் வைத்து பிச்சை எடுப்பவர்களை கண்டு பிடித்து, அவர்களுடன் குழந்தைகளையும் மீட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள குழந்தைகள் நல குழு அலுவலகத்தில் தங்க வைத்துள்ளனர். குழந்தைகளுடன் தாய்மார்கள் பெண்களையும் அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவர்களுக்கு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் உதவிடவும், மேலும், வாடகை குழந்தைகளை வைத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, இதுவரை 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை தாய்மார்களுடன் அழைத்து வந்துள்ளனர்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், "திருச்சி மாவட்டத்தில் சாலையோரங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை மீட்க 28 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுக்களில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நல குழு, காவல்துறை இணைந்து இதுவரை 150 பேர் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளனர். குழந்தைகளையும், பெற்றோரையும் மீட்டு குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யவும், காப்பகங்களில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தற்போது நடத்தி வரும் அதிரடி சோதனையில் வாடகை குழந்தைகள் எதுவும் மீட்கப்படவில்லை. வட இந்தியர்களாயினும் அவர்கள் இனி திருச்சி மாவட்டத்தில் சாலையோரங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கக் கூடாது. அவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வி கற்றலை பாதியில் நிறுத்தி குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் பெரியோர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த குழந்தைகளுக்கு மீண்டும் கல்வி பயில மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

அதேபோல், "குழந்தைகள் மீது வன்மத்தை புகுத்தும் பெரியோர்கள் மீதும் நடவடிக்கை (எப்.ஐ.ஆர்) எடுக்கப்படும்.பொதுமக்கள் குழந்தைகளை வைத்து சாலை ஓரமாக பிச்சை எடுப்பவர்களை கண்டால் உடனடியாக 1091 என்ற உதவி மைய எண்ணிற்க்கு புகார் தெரிவிக்கலாம்" எனவும் தெரிவித்தார்.

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பூக்கொல்லை பகுதியில் 70க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் 8 சிறுமிகளை திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் யாசகம் எடுத்ததாக கூறி குழந்தைகள் நல அமைப்பிலிருந்து வந்தவர்கள் அழைத்து சென்றனர்.

இந்நிலையில், நரிக்குறவர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்களது குழந்தைகள் பிச்சை எடுப்பதாக தவறாக அழைத்து சென்றுவிட்டனர். எனவே குழந்தைகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து, 8 பேரின் பெற்றோர்களை குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்து சென்று பார்க்க வைக்கின்றோம் என போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து நரிக்குறவர் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து 2 வயது சிறுவனின் தாய் சங்கீதா, "நான் எனது மகனை அழைத்து கொண்டு புது துணி எடுப்பதற்காக சத்திரம் பஸ் நிலயத்துக்கு சென்றேன்.அங்கு வந்த போலீசார் எனது மகனை தூக்கி செல்ல முயன்றனர்.அவர்களிடம் ஏனென்று கேட்டதற்கு என்னை தாக்கி கீழே தள்ளிவிட்டு எனது கையில் இருந்த மகனை தூக்கி சென்றனர்.உறவினர்களின் திருமணத்திற்கு புத்தாடை எடுப்பதற்காக வந்தோம்.என்னிடம் முகவரி சான்று இருக்கிறது என்று கூறியும் அவர்கள் மகனை தூக்கிச் சென்றனர்" என்றார்.

மற்றொரு சிறுமியின் தாய் ஜூலி கூறுகையில், "குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கிறோம் என தவறாக நினைத்து சைல்டு லைன் அதிகாரிகள் எங்களது குழந்தைகளை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றனர். குழந்தைகளை பிச்சை எடுக்கும் அளவிற்கு நாங்கள் விடவில்லை.எனது மகள் படிக்கிறாள். நான் சத்திரம் பேருந்து நிலையத்தில் ஊசி-பாசி விற்றால்தான் குழந்தைகளை படிக்க வைக்க முடியும்.எனது குழந்தையை அழைத்து சென்ற அதிகாரிகள் இது வரை எங்கள் கண்ணில் காட்டவில்லை" என்றார்.

குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை தண்டிக்கவும்,கண்டிக்கவும் மாவட்ட நிர்வாகம் முற்பட்டவேளையில் நரிக்குறவர் இனத்தைச்சேர்ந்த சிலரது குழந்தைகளை மாவட்ட நிர்வாகம் தூக்கிச்சென்றதாக்கூறி சாலை மறியல் செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

- ஷானு

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com