செல்போன் திருடிய நபர்: 6 பேர் தாக்கியதில் பறிபோன உயிர்: என்ன நடந்தது?

வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்றவர்களின் செல்போனை திருடிய நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதான 6 பேர்
கைதான 6 பேர்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவிலில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கொடியேற்றப்பட்டு அதனை தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி இந்த விழாவில் கலந்து கொள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு செல்வார்கள்.

அதையொட்டி கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த 10 இளைஞர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் கருவிழுந்தநாதபுரம் அருகே ஆக்கூர் முக்கூட்டு செல்லும் சாலை ஓரம் நேற்று முன்தினம் இரவு தூங்கி இருக்கின்றனர்.

அப்போது நேற்று அதிகாலை 4 மணியளவில் இவர்களது பைகளில் வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் பவர் பேங்க் ஆகியவற்றை ஒரு நபர் திருடியிருக்கிறார். எதேச்சையாக விழித்துக்கொண்ட இவர்கள் தங்கள் பைகளிலுள்ள செல்போனை திருடிக்கொண்டு ஓடிய நபரை விரட்டிப்பிடித்து செல்போன், பவர் பேங்க் ஆகியவற்றை திரும்ப பெற்றதோடு அந்த நபரை அனைவரும் பலமாக தாக்கியிருக்கின்றனர்.

அடித்து கொலை
அடித்து கொலை

அத்துடன் இவர்களுக்கு பின்னால் நடந்து வந்துகொண்டிருந்த நண்பர்களுக்கும் போன் செய்து, "மாப்ளே எங்கள் செல்போனை திருடிய ஒருத்தரை பிடித்து வைத்துள்ளோம்" என்று சொல்ல விரைந்து வந்த நண்பர்களும் செல்போன் திருடிய நபரை அவர்கள் பங்குக்கு மேலும் பலமாக தாக்கியுள்ளனர். அதை தொடர்ந்து போலீசாருக்கு போன் செய்து அடித்ததை மறைத்து "எங்கள் செல்போனை திருடிய நபரை பிடித்துவைத்திருக்கிறோம்" என்று மட்டும் சொல்லிவிட்டு அவர்கள் அனைவரும் தங்களது நடைபயணத்தை தொடர்ந்துள்ளனர்.

போலீசாரும் விரைந்து வந்து தாக்குதலுக்குள்ளான நபரை விசாரித்தபோது "தனது பெயர் இளங்கோவன் என்றும் கீழத்தெரு, மேலப்பெரும்பள்ளம் கிராமம் தான் எனது சொந்த ஊர் என்று கூறியதோடு தன்னை வேளாங்கண்ணி கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற ஆறு பேர் சேர்ந்து தாக்கினர்" என்று சொல்லிவிட்டு மயக்கமடைந்துள்ளார். உடனே அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர், அடுத்த சில மணி நேரத்தில் இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

6 பேர் கைது
6 பேர் கைது

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இளங்கோவன் உயிரிழந்ததை சொல்லாமல் போலீஸாருக்கு தகவல் தெரித்த அந்த செல்போன் எண்ணுக்கு போன் செய்து எங்கே இருக்கிறீர்கள்? என்ன நடந்தது? என்று போலீஸார் கேட்டுள்ளனர்.

அவர்களும் அப்பாவியாய் தாங்கள் இருக்கும் இடத்தை சொல்ல அப்படியே சென்று இளங்கோவனை அடித்து கொலை செய்த கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றிவேல் [18], பொன்னிவளவன்[19], பாலசுப்ரமணியம்[21, தினேஷ்[20], சுகுமார்[19] மற்றும் தென்னாம்பாக்கம் முத்து[20] ஆகிய ஆறு பேரையும் கைது செய்து இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கொலை
கொலை

வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றவர்கள் தங்கள் செல்போனை திருடிய நபரை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் திருடி கொலையான இளங்கோவன் திருமணமானவர் என்பதும், ஆடு திருடுவது, செல்போன் திருடுவது தான் அவரது முழுநேர தொழில் என்கின்றனர் போலீசார்.

- ஆர்.விவேக் ஆனந்தன்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com