புதுக்கோட்டை: கொழுந்தியாள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியவர் சிக்கியது எப்படி?

புதுக்கோட்டை மாவட்டத்தில், கொழுந்தியாள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதை தட்டிக்கேட்ட பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீடு, பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியுடன் பாலசேகர்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீடு, பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியுடன் பாலசேகர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த வடகாடு கரு.தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி கவிதா. இவர், புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியில் ஸ்ரீசாய் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருகிறார்.

இவரது அக்காவின் கணவர் பாலசேகர். இவர், திருச்சி விமான நிலைய பகுதி அவனியா நகரில் வசித்து வருகிறார். பாலசேகர் தனது மனைவியின் தங்கை கவிதாவுக்கு துணிக்கடைக்கு தேவையான துணிகளை வாங்கும் வகையில் கடந்த காலத்தில் 60 ஆயிரம் ரூபாய் உதவி செய்ததாக கூறப்படுகிறது.

இந்த பணத்தைத் பாலசேகர் திருப்பிக் கேட்டதோடு, அதற்கு வட்டியும் சேர்த்து தருமாறு கூறியுள்ளார். ஆனால் கவிதா தர மறுத்திருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மேல் பாலசேகர் தனது மனைவியின் தங்கை கவிதா வீட்டுக்கு 2 பேரை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.

அப்போது கவிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அங்கு பணம் கேட்டு பாலசேகர் தகராறு செய்ததில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அவருடன் வந்த இரண்டு நபர்களும் பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டிலை கொளுத்தி வீட்டின் அருகில் உள்ள கோழிக்கொட்டகை மீது வீசியுள்ளனர்.

அந்த பெட்ரோல் குண்டு எரியாததால் மீண்டும் ஒரு பெட்ரோல் குண்டை கொளுத்தி அவரது கூரை வீட்டின் முன்புள்ள திண்ணை மீது வீசி உள்ளார். அந்த குண்டு தீப்பிடித்து எரிந்ததால் கவிதா தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராணி என்பவர் சத்தம்போட்டு பாலசேகரை அங்கிருந்து கிளம்புமாறு சாலை வரையில் பிடித்துத் தள்ளிச் சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் பாலசேகர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த சிறிய கைத்துப்பாக்கியை எடுத்து கவிதாவை சுட முயன்றுள்ளார்.

இதனைப் பார்த்து சுதாரித்துக்கொண்ட ராணி துப்பாக்கியை தட்டிவிட்டதால் வெடித்த குண்டு வானத்தை நோக்கி சென்றுள்ளது. உடனே 3 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

இதன் பிறகு கவிதாவின் கணவரான சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்து சம்பவம் பற்றி விசாரித்து வடகாடு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுவிட்டார்கள். ஆனால் அதன் பின்னர் கவிதாவின் வீடு தீப்பற்றி எரிந்திருக்கிறது.

இதை சற்றும் எதிர்பாராத அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர். இதற்கிடையே கவிதாவும், அவரது கணவரும் கொடுத்த புகாரின்பேரில் வடகாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு திருச்சியில் பதுங்கி இருந்த பாலசேகரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

போலீஸ் விசாரணையில் பாலசேகர் வைத்திருந்த கைத்துப்பாக்கி வடமாநிலத் தொழிலாளர்கள் மூலம் வாங்கியதும், அதனை தற்காப்புக்காக எப்போதும் வைத்திருப்பதும், அதை எடுத்துதான் கவிதாவை சுட முயன்றதும் தெரியவந்தது.

இதன் பிறகு வடகாடு போலீசார் பாலசேகரை கைது செய்து, அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் 25 குண்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாலசேகரை சிறையில் அடைத்தனர். குடும்ப சண்டையில் கொழுந்தியாளிடம் வீரத்தைக் காட்ட துப்பாக்கியை...அதுவும் கள்ளத்துப்பாக்கியை மாமன் தூக்கிய சம்பவம் வடகாடு மற்றும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- ஷானு

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com