தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், ராஜ்கண்ணா நகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி சினேகா. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்ற சினேகா சற்று தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். இதில் கந்தசாமிக்கு சினேகா மீது சந்தேகம் வந்ததால், இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது.
இதன் காரணமாக கணவன் கந்தசாமி மீது திருச்செந்தூர் காவல் நிலையத்திற்கு சென்று சினேகா புகார் கொடுத்துள்ளார். அப்போது கந்தசாமி மது போதையில் இருந்ததால் மறுநாள் காலை விசாரணைக்கு வரும்படி போலீசார் சினேகாவை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மறுநாள் காலையில் கந்தசாமி வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் ராஜஸ்தானை சேர்ந்த ஐஸ்கிரீம் வியாபாரி வினோத் தரேகான் என்பவர் கந்தசாமியின் வீட்டு மொட்டை மாடியில் தலையில் பயங்கர காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது போதையில் இருந்த கந்தசாமி தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருப்பவன் மொட்டை மாடியில் உறங்குவதாக நினைத்துக்கொண்டு அவரது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தசாமியை கைது செய்தனர். ஐஸ்கிரீம் விற்று பிழைப்பு நடத்த ராஜஸ்தானில் இருந்து வந்த வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
- கோபிகா ஸ்ரீ