தமிழ்நாட்டில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை வெளியிடக்கூடாது என மாநில அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுதிப்தோ சென் இயக்கத்தில் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வரும் மே 5ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் ஆதா ஷர்கா, புர்க்கா அணிந்து கொண்டு உரையாடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அந்தக் காட்சியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேருவதற்காகக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டேன். தற்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். இது கேரளாவைச் சேர்ந்த 32 ஆயிரம் பெண்களின் கதை எனக்கூறும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது.இதற்கு கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மக்களிடம் வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்தில் இருப்பதால் படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும், கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்தப் படம் வெளியானால் கேரளாவை போன்று இங்கும் எதிர்ப்புகள் கிளம்பும் என்பதால் இப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்குத் தடைகோரி உச்சநீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு வந்தது. இதனை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில், மற்றொரு வழக்கும் விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது உண்மை கதை அல்ல, கற்பனையான கதை வாசகத்தைச் சேர்க்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கேரளா முதல்வர் பினராயி விஜயன், ”தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. வகுப்புவாத விஷத்தை விதைக்கும் வகையில் சங்பரிவாரத்தின் பிரசாரமாக அமைந்துள்ளது என கடுமையாகச் சாடி இருந்தார்.
இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், ”கேரளாவின் யதார்த்தத்தை மொத்தமாக மிகைப்படுத்தியும், திரித்தும் கூறியுள்ளனர். இது கேரளாவின் கதை அல்ல” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.