கொடுத்த கடனை திருப்பி கேட்ட பைனான்சியர்- காரோடு கொளுத்திய நான்கு பேர் கைது

விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை சடலத்துடன் சுற்றியுள்ளனர்
கொலையான நாகஜோதி மற்றும் கைது செய்யப்பட்ட 4 பேர்
கொலையான நாகஜோதி மற்றும் கைது செய்யப்பட்ட 4 பேர்

கொடுத்த கடனை திரும்ப கேட்ட பைனான்சியர் காரில் கடத்தி காரோடு கொளுத்தி கொலை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞானபுரம் காட்டுப் பகுதியில் கார் ஒன்று எரிந்து கொண்டு இருப்பதை பார்த்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன், தீயை அணைக்க தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். அப்போது காரின் டிக்கியில் ஒருவர் உடல் எரிந்து கொண்டிருப்பது தெரியவந்தது

உடனே அங்கு தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்து விசாரிக்கப்பட்டது. விசாரணையில் காரின் அருகில் ஆண்ட்ராய்டு மொபைல் போன் ஒன்றை கண்டுபிடித்தனர் போலீசார். முக்கால்வாசி எரிந்த நிலையில் இருந்த உடலை பரிசோதித்த போது அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து காரின் பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.அதில் தீப்பிடித்து எரிந்த அந்த கார், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகன் நாகஜோதிக்கு(48)சொந்தமானது என்று தெரியவந்தது. நாகஜோதி வட்டி தொழில் செய்யும் பைனான்சியராக இருந்துள்ளார்.

நாகஜோதியிடம் கார் ஓட்டுநராக இருந்து வந்த கன்னிராஜபுரத்தை சேர்ந்த மைக்கேல் ராஜ் (27)என்பவர் ரூபாய் 2 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார். அதற்கு சாயல்குடியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் என்ற மாரீஸ் (28) ஜாமீன் கையெழுத்து போட்டு உள்ளார். இந்த நிலையில் வாங்கிய பணத்தை மைக்கேல் ராஜால் திருப்பி கொடுக்க முடியவில்லை. அதனால், ஜாமீன் கையெழுத்து போட்ட மைக்கேல் ராஜ் என்ற மாரீஸை சிறை பிடித்து வைத்துள்ளார் நாகஜோதி.

இதனால் மைக்கேல் ராஜ் என்கிற மாரீசின் உறவினர்கள் உன்னால்தான் மைக்கேல் ராஜை சிறை பிடித்துள்ளனர். எனவே நீ உடனே கடனை திரும்ப கொடுத்தால்தான் மைக்கேல் ராஜை நாகஜோதி விடுவிப்பார் என்று நெருக்கடி கொடுத்துள்ளனர். மைக்கேல் ராஜ் கேட்டுக்கொண்டதால் ஜாமீன் கையெழுத்து போட்ட மைக்கேல் ராஜை விடுவித்தார் நாகஜோதி.

இரண்டு லட்ச ரூபாய்க்கு தனது நண்பரை சிறை பிடித்து விட்டானே என்று நாகஜோதி மீது மைக்கேல் ராஜ்க்கு கோபம் ஏற்பட்டது. அதனால் நாகஜோதியை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார் மைக்கேல் ராஜ். தனது சகோதரர் குழந்தை கனி (26), ஜாமீன் கையெழுத்து போட்ட மைக்கேல்ராஜ் என்ற மாரீஸ் மற்றும் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த கணபதி (29) ஆகிய 4 பேர் சேர்ந்து பைனான்சியர் நாகஜோதியிடம் "வாங்கிய கடன் இரண்டு லட்சத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பி தந்து விடுகிறோம். நாங்கள் சொல்லும் இடத்திற்கு நீங்கள் வாருங்கள்”என்று நாகஜோதியை அழைத்துள்ளனர்.

அதை நம்பி தனது காரில் தனியாக வந்துள்ளார் நாகஜோதி. அவருடன் நான்கு பேரும் காரில் ஏறி வந்துள்ளனர். வரும் வழியிலேயே காரில் வைத்து பைனான்சியர் நாகஜோதியின் கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் பகல் முழுவதும் கார் டிக்கியில் சடலத்தை வைத்து கொண்டு எரிப்பதா அல்லது புதைப்பதா என்று சுற்றி சுற்றி வந்துள்ளனர். விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை சடலத்துடன் சுற்றியுள்ளனர்.

கடைசியாக நாகஜோதியை காரோடு தீ வைத்து எரித்து விடுவது என்று முடிவு செய்துள்ளனர். அதன்படி இரவு நேரத்தில் குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலை கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் காரை நிறுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

இது தொடர்பாக குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுநர் மைக்கேல் ராஜ், அவரது சகோதரர் குழந்தை கனி, மைக்கேல் ராஜ் என்ற மாரீஸ், கணபதி ஆகிய நான்கு பேரை கைது செய்து விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

- எஸ். அண்ணாதுரை

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com