மதுரை: 1 வயது குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்த தந்தை - அதிர்ச்சி பின்னணி

மனஉளைச்சலில் இருந்த அருண் தனது ஒன்றரை வயது மகனுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
அருண்
அருண்

உசிலம்பட்டியில் குடும்ப தகராறில் தனது ஒன்றரை வயது மகனுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாடிக்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் அருண். கட்டிட தொழிலாளியான இவருக்கும், இவரது மனைவி ஜீவிதாவிற்கும் இடையே கடந்த பல மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஜீவிதா கோபித்துக் கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அருண் தனது ஒன்றரை வயது மகனுக்குப் பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் ஒன்றரை வயது குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பம் குறித்து தகவலறிந்து வந்த உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com