திருநெல்வேலி மேலப்பாளையம் அடுத்த காலனி பகுதியை சேர்ந்தவர் 5 வயது சிறுமி. இவரை கடந்த 29 ஆம் தேதி அதேப் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் குடும்பத்தினர் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். இந்நிலையில் சிறுவனின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து, தாக்குதலிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த போலீசார் அங்கு வந்து அவர்களை தடுத்து நிறுத்தியபோது காவல்துறையினருக்கும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்கு உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘எங்களது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததோடு இல்லாமல் தொடர்ந்து எங்களுக்கும், எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அவர்கள் கொலை மிரட்டல் விடுகின்றனர்.
இதைப்பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் காவல்துறையினர் சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்’ என தெரிவித்தனர்.