கட்டிய மனைவியுடன் விவகாரத்து ஆனதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜின்குமார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் முதல் மனைவியை ஏமாற்றி விட்டு 18 வயதுடைய இளம் பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்திற்கு மேகாமண்டபம் பகுதியைச் சேர்ந்த பெந்தேகோஸ்தே சபை போதகர் பிரின்ஸ் என்பவர் உதவியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் இளம் பெண்ணின் தாய் தனது மகளைக் காணவில்லை எனப் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், " விஜின்குமார் தன் மனைவியை நீதிமன்றம் மூலம் விவாகரத்து செய்து விட்டேன் எனப் பொய்சொல்லி என்னுடைய மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக முதல் மனைவியிடம் விசாரித்த போது கருத்து வேறுபாடு காரணமாகச் சண்டையிட்டு தனது அம்மா வீட்டிற்குச் சென்றுள்ளதாகவும் இது வரையிலும் விவாகரத்து எதுவும் நான் செய்யவில்லை எனவும் கூறியுள்ளார். என்னுடைய மகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் நீண்டநாட்களாகியும் நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலட்சியம் கட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து இளம் பெண்ணின் தாயார் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலைய போலீசார் 6 சட்டப்பிரிவுகளின் கீழ் விஜின்குமார் மற்றும் போலித் திருமணச் சான்று வழங்கிய போதகர் பிரின்ஸ் மற்றும் போலி திருமணத்திற்கு உதவி புரிந்த சிவக்குமார் ,சுரேஷ் உட்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த விஜின்குமார் இரண்டாவதாகத் திருமணம் செய்த இளம்பெண்ணுடன் கேரளாவுக்குச் சென்று தலைமறைவானார். உடனடியாக அவரை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கேரளாவுக்குச் சென்றுள்ளனர். ஆனால் அதற்கு முன்பாகவே விஜின்குமார் இளம்பெண்ணுடன் தப்பிச் சென்றுள்ளார். விஜின்குமாரின் செல்போன் எண்ணை வைத்து தொடர்ந்து கண்காணித்து வந்ததுள்ளனர். பின்னர் வேளாங்கண்ணியில் லாட்ஜில் ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அங்குச் சென்ற தனிப்படை போலீசார் விஜின்குமார் மற்றும் இளம் பெண்ணையும் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து விஜின்குமாரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைத்தனர்.