தருமபுரியிலிருந்து திகிலோடு வழியாக மருக்காரன்பட்டி கிராமத்திற்கு போதுமான அரசு பேருந்து வசதியில்லாததால், பொதுமக்கள், மாணாக்கர்கள் அவதிபட்டு வருவது குறித்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து இரண்டே நாட்களில் கூடுதல் அரசு பேருந்தை இயக்க நடவடிக்கை எடுத்துள்ள தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்திக்கு கிராம மக்கள நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மருக்காரன்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறும்போது,
"பாப்பாரப்பட்டி சுற்றுவட்டார பகுதி என்பது அதிக அளவு மலை கிராமங்களை கொண்டதாக உள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நகர்ப்புற பகுதிக்கு வந்து செல்ல பெரும்பாலும் அரசு பேருந்தை நம்பியிருக்கும் நிலை உள்ளது.
போதிய பேருந்து வசதி இல்லாததால் பல கி.மீ. தூரத்திற்கு மூட்டை முடிச்சுகளுடன் நடந்து செல்லும் அவல நிலை தொடர்ந்தது. இது தவிர அரசு பேருந்தை மட்டுமே நம்பியிருக்கும் மாணாக்கர்கள், ஆபத்தான நிலையில் படிகட்டுகளில் தொங்கி கொண்டே செல்லும் நிலை நீண்ட காலமாகவே நீடித்தது. தங்கள் கிராமங்களுக்கு கூடுதல் அரசுப் பேருந்தை இயக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை முன் வைத்து வந்தோம். எந்த ஒரு அதிகாரியும் இதனை கண்டுகொள்ளவே இல்லை.
பேருந்துக்காக பொதுமக்கள் சந்தித்து வரும் சிரமம் குறித்து எங்களுக்கே தெரியாமல் புகைப்படத்துடன் பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. இந்த செய்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்களின் கவனத்திற்கு செல்லவே, பொதுமக்கள், மாணாக்கர்களின் நலன் கருதி செய்தி வெளியான இரண்டே நாட்களில் இப்பகுதிக்கு கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுத்தார். எங்களின சிரமங்களை அறிந்து உடனடியாக எங்களது கிராமங்களுக்கு கூடுதல் அரசுப்பேருந்து இயக்க உடனடியாக நடவடிக்கை எடுத்த தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும், பாரட்டுக்கயைும் தெரிவிக்கிறோம்" என்றனர் மகிழ்ச்சியுடன்.
- பொய்கை. கோ. கிருஷ்ணா