எந்த நேரத்தில் கோவை மாவட்ட பொறுப்புன் அமைச்சராக பொறுப்பு ஏற்றாரோ முத்துசாமி. பாவம், போற பக்கமெல்லாம் ஒரே பஞ்சாயத்தாகதான் இருக்குது.
அமைச்சர் முத்துசாமிக்கு, கோவை பொறுப்பு அமைச்சர் பதவியோடு சேர்த்து டாஸ்மாக் நிர்வாகத்தையும் கொடுத்தார் முதல்வர். அதை வாங்கியவர், டெட்ரா பாக்கெட்டில் மதுவை கொடுக்கலாமா? என்றெல்லாம் அலசிப் பேசியவர் ஒரு கட்டத்தில் ’காலையிலேயே குடிப்போரை குடிகாரர்கள் என்று சொன்னால் என்னால் ஜீரணிக்க முடியாது’ என்று சொன்ன டயலாக் நாடு தாண்டி வைரலானது.
அதற்கடுத்து ஈரோட்டில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவின் போது, ‘எதிர்காலத்தில் அரசியலுக்கு வராதீர்கள். அரசியல்வாதி வேலை கடினமாக இருக்குது’ என்று ஓப்பன் டூப்பனாக பேசி வைக்க, அதுவும் பரபரப்பானது.
அதற்கடுத்து மீண்டும் கோவையில் ஒரு பரபரப்பில் சிக்கியுள்ளார் மிஸ்டர் முத்துசாமி, அதாவது, கோவையிலுள்ள மருதமலை கோவிலில் பார்க்கிங் உள்ளிட்டவற்றை மாவட்ட அமைச்சர் எனும் முறையில் ஆய்வு செய்ய சென்றார் முத்துசாமி.
அப்போது, அவரது பாதுகாப்பு போலீஸ் ஜீப், அறநிலையத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கார்கள் இவற்றோடு கோவை தி.மு.க புள்ளிகளின் கார்கள் என்று மிகப்பெரிய கான்வாய் அவர் பின்னாடி சென்றது.
இந்த நிலையில் அடிவார பகுதியில் புதிய பார்க்கிங் அமைப்பதற்கான இடத்தை அவர் பார்வையிட்டு, ஆய்வு செய்தபோது மருதமலை கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்களின் கார்களை மேலே அனுப்பாமல் நிறுத்தி வைத்திருந்தனர் நிர்வாகத்தினர்.
வெகு நேரமாக காத்திருந்ததால் கடுப்பான வேலூரை சேர்ந்த பக்தர் ஒருவர், சரியாக அமைச்சர் அந்த பகுதிக்கு வந்ததும் நேரடியாக அவரிடம் சென்று ‘உங்களுக்காக எங்களை மணிக்கணக்குல காக்க வைக்கிறாங்க. இது என்ன நியாயம்? எங்களை சாமி கும்பிட மேலே போக அனுமதிக்க சொல்லுங்க’ என்று குமுறிவிட்டார். இதை எதிர்பார்க்காத அமைச்சர் சில நொடிகள் பதறிப்போனார்.
அதன் பின் அதிகாரிகளிடம் ‘ஏன் இப்படி அவங்கள காக்க வைக்கிறீங்க?’ என்று விசாரித்தபோது மலை மேல் பார்க்கிங் இடமில்லாத காரணத்தால்தான் கீழே உள்ள வாகனங்களை மேலே அனுமதிக்கவில்லை என்று பதில் வந்திருக்கிறது.
இதை அந்த நபரிடம் சொன்ன அமைச்சர் ‘பார்க்கிங் பிரச்னையை சரி செய்ய, புது பார்க்கிங் தளம் அமைக்க ஆய்வு செய்யதான் நான் இப்ப இங்கே வந்திருக்கேன். மலை கோவிலுக்கே நான் தேவஸ்தான பஸ்லதான் போனேன்’ என்று மென்மையாக கூறி அமைதி படுத்தினார்.
- ஷக்தி