ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் - முழு விபரம் என்ன?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் முழு விபரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர், முதலமைச்சர்
ஆளுநர், முதலமைச்சர்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி, ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டிருந்தார். மாநில அரசு மற்றும் முதலமைச்சரின் பரிந்துரை இல்லாமல் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டிருந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனைத்தொடர்ந்து அரசியலமைப்பு சட்டத்தை மீறி அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்நிலையில் ‘செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த பரபரப்பான சூழலில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விபரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘தமிழ்நாடு அரசு அமைச்சரவை பற்றி உங்களிடம் எந்த ஒரு ஆலோசனையும் கேட்கவில்லை.

ஆனால் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக நீங்களே அறிக்கையை வெளியிட்டு அதனை மீண்டும் திரும்ப பெறுவதாக தெரிவித்து உள்ளீர்கள்.

அதுவும் அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்துவிட்டு சொல்வதாக கூறி இருக்கிறீர்கள். இதிலிருந்து நீங்கள் அந்த முடிவை எடுப்பதற்கு முன்பு யாரையும் ஆலோசிக்கவில்லை என்பது தெரியவருகிறது.

அமைச்சரை நீக்க சொல்வது அல்லது சேர்க்க சொல்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. விரும்பத்தகாத வார்த்தையை பயன்படுத்தியதாக கூறியது சரியில்லை.

எப்போதும் தமிழ் கலாசாரத்தின்படி மரியாதையாகத்தான் உங்களை நடத்தி வந்துள்ளோம். அதற்காக உங்களது சட்டவிரோத உத்தரவுக்கு பணிய வேண்டும் என்பதாக அர்த்தம் இல்லை.

அதுமட்டும் இல்லாமல் நீங்கள் ஒரு சார்பு தன்மையுடன் செயல்பட்டுள்ளீர்கள். குறிப்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

ஒரு சார்பு தன்மைதான் உங்களின் நோக்கம். குட்கா வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கூறியபோதும் நடவடிக்கை இல்லை. இதன் மூலம் உங்களின் இரட்டை நிலைப்பாடு வெட்ட வெளிச்சமாகிறது.

அதேப் போல தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக மட்டுமே அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

எனவே, செந்தில் பாலாஜி விசாரணையில் தலையிடுவார் என்பது அடிப்படை ஆதாரமில்லாதது. அமைச்சர் பொறுப்பில் புதிதாக ஒருவரை சேர்ப்பதோ அல்லது நீக்கம் செயவதோ முதலமைச்சரின் முடிவுகளுக்கு உட்பட்டது.

பதவிப் பிரமாணம் செய்து வைக்க மட்டுமே ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் தலைமையின் கீழ் செயல்படும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார்’ என, அதில் கூறியுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com