நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கர பாண்டியன் காலி தண்ணீர் பாட்டிலை மாலையாக அணிந்து வந்து மனு அளித்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாளை மண்டலம் 32து வார்டு செயின்ட் பால்ஸ் நகரில் ஆயுதப்படை குடியிருப்பு தென்புறம், இசக்கி அம்மன் கோவில் வடது புறம், பால்ஸ் நகர் மேற்கு, அப்பாசாமி தோட்டம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் நான்கு மாதங்களாக முறையாகக் கிடைக்கவில்லை. ஒரு சில நாட்கள் மட்டும் சிறிது நேரம் குழாய்களில் தண்ணீர் வருகிறது. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அப்பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சீராக குடிதண்ணீர் தினமும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குடிநீர் பிச்சை சீர் செய்யாவிட்டால் மாநில காங்கிரஸ் தலைவரிடம் அனுமதி பெற்று மிகப்பெரிய அளவில் காந்திய வழியில் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.