'100 நாட்கள் போராடி மறுபிறவி பெற்ற குழந்தை' - என்ன நடந்தது?

நாகையில் 540 கிராம் எடையுடன் பிறந்து உயிருக்குப் போராடிய குழந்தையை மருத்துவர் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'100 நாட்கள் போராடி மறுபிறவி பெற்ற குழந்தை' - என்ன நடந்தது?

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள கோகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்குக் கடந்த 7 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளனர். குழந்தை பெற வேண்டி பல்வேறு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற்று வந்துள்ளனர். சிகிச்சை எந்த பலனும் அளிக்காத நிலையில் சரண்யா தனது தாயின் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார்.

பின்னர் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சரண்யா கர்ப்பமடைந்துள்ளார்.

இதனையடுத்து பிரசவத்திற்காகக் கடந்த ஏப்ரல் 26ம் தேதி சரண்யாவை நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அவருக்குப் பிறந்த குழந்தையின் எடை 540 கிராம் மட்டுமே இருந்துள்ளது. குழந்தைக்கு முறையான உருவமே இல்லாத நிலையிலிருந்துள்ளது. மருத்துவர்களும் குழந்தை உயிர் பிழைக்க 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு என்று கூறியுள்ளனர்

இதனையடுத்து குழந்தைகள் நல மருத்துவர் சூர்யபிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் நம்பிக்கையுடன் குழந்தைக்குச் செயற்கை சுவாசம் அளித்தனர். பின்னர் நுரையீரலுக்கு ரத்தம் சீராகச் செல்ல சிகிச்சை அளித்தனர். மருத்துவர்களின் விடா முயற்சியால் 30 நாட்களுக்குப் பிறகு சீரான நிலைக்குக் குழந்தை வந்தது. தாயிடம் குழந்தை நேரடியாகத் தாய்ப்பால் குடிக்கப் பயிற்சியளிக்கப்பட்டது. 100 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் 1.5 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருந்த குழந்தையும், தாயும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற தாய்ப்பால் வார விழா நிறைவு நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் குழந்தையைத் தாயிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தம்பதியினர் மருத்துவர்களுக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

இது தொடர்பாகக் குழந்தை நல மருத்துவர் சூர்யபிரகாஷ், “தமிழகத்தில் குறைந்த எடையுடன் பிறந்து காப்பாற்றப்பட்ட 10வது குழந்தையாக இந்த குழந்தை உள்ளது. இனி பயம் இல்லை. தொடர்ந்து குழந்தைக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சை முறைகள் கொடுப்பது குறித்துப் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.” என்றார்.

-ஆர்.விவேக் ஆனந்தன்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com