தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தஞ்சை அருளானந்த நகர் பகுதியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பூங்கா ரூபாய் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தப் பணியினை மாநகராட்சி மேயர் ராமநாதன், செயற்பொறியாளர் ஜெகதீசன் உள்ளிட்ட அலுவலர்கள் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பே பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையடுத்து இந்த பூங்காவில் பணிகள் நிறைவுற்ற நிலையில் பூங்கா எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பூங்காவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்காவும், குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா மற்றும் தொழில்நுட்ப கோளரங்கம், காட்சி கூடம், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ஏவுகணைகள் மாதிரி, மியூசிக்கல் பவுண்டன், மாபெரும் டைனோசர் பொம்மைகள், இன்பினிட்டி கிணறு, கண்காணிப்பு குவிமாடம், ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமல்லாமல் அறிவியல் குறித்த தகவல்களும் எழுதப்பட்டு அவற்றை படித்து தெரிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களை கண்காணிப்பதற்கு சி.சி.டி.வி கேமராவும் நிறுவப்பட்டுள்ளது. தற்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால் இந்த பூங்காவினை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து மேயர் ராமநாதன் கூறும்போது,” தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இந்த பூங்கா அறிவியல் தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் ஆன்லைன் கேமில் விளையாடாமல் அறிவியல் தொடர்பான இதுபோன்ற பூங்காக்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் தமிழக முதலமைச்சர் இந்த பூங்காவினை விரைவில் திறந்து வைப்பார்" என்றார்.