தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே 28 நாட்களுக்கு மேலாக கணவன் மாயமான நிலையில் கர்நாடகாவில் ரயிலில் அடிபட்டு இறந்த செய்தி கேட்டு மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் அருகே விளத்தூர் குடியான தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜ்குமார் (34). இவர் சேலத்தில் உள்ள எஸ்.என்.ஆர். ட்ரான்ஸ்போர்ட் கம்பெனியில் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். கடந்த 1ம் தேதி சேலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு ஜவ்வரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மற்றொரு டிரைவரான மோகன் என்பவரோடு சென்றுள்ளார்.
கர்நாடக மாநிலம், தாவுஸ்பேட் அருகே தேனீர் குடிப்பதற்காக இறங்கிய ராஜ்குமார் நீண்ட நேரம் ஆகியும் வராததையடுத்து லாரி உரிமையாளர் சுப்பிரமணியம் என்பவரிடம் மற்றொரு டிரைவரான மோகன் தகவலை தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பல டிரைவர்கள் இதுபோல் சொல்லாமல் கொள்ளாமல் வேலையைவிட்டு ஓடிவிடுவதால் சக டிரைவர் மோகன் இதனை பெரிதுபடுத்தவில்லை.
கடந்த 1ம் தேதி இரவு 10 மணி அளவில் காணாமல் போன லாரி ஓட்டுனர் ராஜ்குமார் குறித்து எந்த தகவலும் யாருக்கும் தெரியாததால் ராஜ்குமார் மனைவி செல்வி இது குறித்து திருப்பனந்தாள் போலீசாரிடம் புகார் அளித்தார்.
இது தொடர்பாக விசாரிக்கச் சென்ற திருப்பனந்தாள் போலீசார், சேலம் மாவட்ட போலீசாரிடம் தெரிவிக்க, அவர்கள் லாரி உரிமையாளர் சுப்பிரமணியத்திடம் கேட்டுள்ளனர். அவரோ, காணாமல் போன ராஜ்குமார் குறித்து எங்களுக்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை” என்று சொல்லவே சரியான தகவல் கிடைக்காத நிலையில் தொடர்ந்து அவரை தேடும் முயற்சியில் உறவினர்களே ஈடுபட்டதோடு சேலம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து சேலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதோடு தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி இரவு கர்நாடகா மாநிலம், தாவுஸ் பேட் அருகே ரயிலில் அடிபட்டு ராஜ்குமார் இறந்துள்ளதும், இவரைப் பற்றிய தகவல்கள் சரிவர தெரியாததால் சுமார் 13 நாட்களாக அவரது உடல் அங்குள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டு பின்னர், அடையாளம் தெரியாத நபராக கருதி பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்துள்ளனர். உறவினர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்த்து கண்ணீர் விட்டனர்.
இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட ராஜ்குமாரின் மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. கடந்த 1ம் தேதி தனது 6 வயது மகனுக்கு சைக்கிள் வாங்கிக் கொள்ள ரூ.5 ஆயிரம் பணத்தை அனுப்பி மனைவி செல்வியிடம் ராஜ்குமார் பேசியுள்ளார். அதன் பின்னர் அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதோடு அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெளி மாவட்டத்திற்கு வேலைக்குச் சென்ற கணவனை காணவில்லை என புகார் அளித்த மனைவிக்கு 28 நாளைக்கு முன்பே அவர் ரயிலில் அடிபட்டு இறந்ததாக வந்த செய்தி கிடைத்ததோடு இறந்த அவரது முகத்தைக்கூட பார்க்க முடியாமல் அடக்கம் செய்திருப்பதாக சொல்லப்பட்ட தகவலைக்கேட்டு ஒட்டுமொத்த விளத்தூர் கிராமம் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது.
-ஆர்.விவேக் ஆனந்தன்