தஞ்சாவூர் அருகே தங்கள் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட நிலங்களை அருகில் உள்ள கிராமத்துடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆதார் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை களத்தூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது 250 ஏக்கர் விளை நிலங்கள் களத்தூர் வருவாய் கணினி சிட்டாவில் பதிவாகி இருந்தது.இந்நிலையில் அந்த 250 ஏக்கர் நிலங்கள், சிட்டா அடங்கல் அடுத்த வருவாய் கிராமம் ஆன சூரியநாராயணபுரம் கிராமத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
வருவாய் துறையின் மெத்தனத்தால் தவறு நடந்துள்ளதாக குற்றம்சாட்டும் கிராம மக்கள் உடனடியாக பழைய முறைப்படி தங்கள் கிராமத்துடன் இணைத்து சிட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி களத்தூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் பேரணியாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆதார், ரேஷன்கார்டு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப் போவதாக தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.