தஞ்சாவூர்: புல்லட்டுக்கு மட்டும் குறிவைத்த 4 திருடர்கள் - 20 வாகனங்கள் பறிமுதல்

தஞ்சாவூர்: புல்லட்டுக்கு மட்டும் குறிவைத்த 4 திருடர்கள் - 20 வாகனங்கள் பறிமுதல்

தஞ்சாவூர் பகுதியில் திருடப்பட்ட 20 புல்லட் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் ஒருவர் கைது செய்யப்பட்டார். மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் நகர் பகுதி வல்லம், ஒரத்தநாடு காவல் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கடைகள், வீடுகள் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த புல்லட் மோட்டார் சைக்கிள்கள் அவ்வப்போது திருட்டு போயின. இது தொடர்பாக புல்லட்டின் உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். விலை உயர்த்த புல்லட்டை திருடும் கும்பலை கைது செய்ய, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி, தஞ்சாவூர் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலும், சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன் மேற்பார்வையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும், குறைந்த விலையில் புல்லட் மோட்டார் சைக்கிள் விற்பனை செய்வது குறித்தும் விசாரித்து வந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடப்பட்ட புல்லட் மோட்டார் சைக்கிளை ஒரு இளைஞரிடம் குறைந்த விலைக்கு விற்க முயலும் போது, போலீஸாரிடம் ஒருவர் பிடிபட்டார். பின்னர் அவரை போலீஸார் விசாரித்தபோது, தஞ்சாவூர் பூக்கார முதல்தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அரவிந்த் (30) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரித்த போது, தஞ்சாவூர் பகுதியில் புல்லட் மோட்டார் சைக்கிள்களை மட்டும் நான்கு பேர் சேர்ந்து திருடுவதாகவும், அதில் உள்ள பதிவு எண்களை மாற்றி, குறைந்த விலைக்கு தஞ்சாவூர் பகுதியிலேயே விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி குறைந்த விலைக்கு விற்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான 20 புல்லட் மோட்டார் சைக்கிள்களை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர். இந்த புல்லட் மோட்டார் சைக்கிள் திருட்டில் தொடர்புடைய காசவளநாடு புதூரைச் சேர்ந்த அர்ஜூன், அரவிந்த், தஞ்சாவூர் கீழவாசலைச் சர்ந்த அலெக்ஸ் ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com