5 ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் திருவிழா: நாட்டு வெடி பட்டாசு - சோகத்தில் முடிந்த கரகம் அழைப்பு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்தானதில் இளைஞர் பலி, குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்
வெடி விபத்தில் உயிரிழந்த இளைஞர்
வெடி விபத்தில் உயிரிழந்த இளைஞர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே முரசுபட்டி, கருப்பாயிகொட்டாய், குட்டகாட்டுர், பேகாரஅள்ளி உள்ளிட்ட 32 கிராமங்களில் 5 ஆண்டிற்கு ஒரு முறை காரிமங்கலத்தில் உள்ள ஐயர் கொட்டாய் பகுதியில் உள்ள பங்காளிகளுக்கு சொந்தமான பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் திருவிழா நடத்துவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு கருப்பாயிகொட்டாய் கிராமத்தில் உள்ள பங்காளிகளின் வீடுகளுக்கு சென்று கரகம் அழைத்து ஊர்வலமாக எடுத்து சென்றுள்ளனர். அப்போது கிராமத்து இளைஞர்கள் ஊர்வலத்தின் போது வானவேடிக்கைக்காக நாட்டு வெடி பட்டாசுகளை அதிகளவு வாங்கி மினி சரக்கு வாகனத்தில் வைத்து பட்டாசுகளை வெடித்து கொண்டு சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக வெடிக்கபட்ட பட்டாசுகளின் தீபொறி மினி சரக்கு வண்டியில் உள்ள சாக்கு மூட்டையின் மீது விழுந்துள்ளது. இதில் மளமளவென பட்டாசுக்கள் வெடிக்க தொடங்கியது. அப்போது வாகனத்தின் அருகே இருந்த விஜயகுமார் (வயது21) பரசுராமன் (20) யாசிகா (6) பிரதிக்க்ஷா (6) தர்ஷன் (5) நாகராஜ் உள்ளிட்ட 6 பேர் வெடிவிபத்தில் சிக்கி காயம் அடைந்தனர்.

விபத்தில் காயமடைந்த சிறுமி
விபத்தில் காயமடைந்த சிறுமி

இவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் சிறுமி யாசிகா என்பவர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார். இதில் விஜயகுமார் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நாட்டு வெடி பட்டாசுகள் எங்கிருந்து வாங்கபட்டது, யார் வெடி வெடித்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் திருவிழாவை நடத்தாமல் கிராமத்தில் உள்ளவர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

- பொய்கை.கோ.கிருஷ்ணா

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com