35 ஆண்டுகளுக்கு பிறகு மாடு மாலை தாண்டும் திருவிழா- பரிசு தந்த கன்னிப்பெண்கள்

எல்லைக்கோட்டை கடந்து சென்ற காளைகள் மீது மஞ்சள்பொடி தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாடு மாலை தாண்டும் திருவிழா
மாடு மாலை தாண்டும் திருவிழா

வேடசந்தூர் அருகே 35 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஸ்ரீ குண்டம்ம கோடங்கி தாத்தன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்ற மாடு மாலை தாண்டும் திருவிழாவில் வெற்றி பெற்ற மாட்டிற்கு பரிசாக எலுமிச்சை பழங்களை கன்னிப்பெண்கள் வழங்கினர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள குடப்பம் கிராமத்தில் ஸ்ரீ குண்டம்ம கோடங்கி தாத்தன் கோவில் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தீபாராதனையும், அபிஷேகமும் நடைபெற்றது.

அதன் பின்னர் திங்கட்கிழமை அன்று குண்டம்ம கோடங்கி தாத்தன் சாமிக்கு ஆபரண பெட்டியை தேவராட்டம், சேர்வையாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அங்கு பெண்கள் கொழுக்கட்டை படையல் வைத்தனர். இன்று கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து பால் பூஜை செய்தனர்.

அதனைத்தொடர்ந்து மாலை திருவிழாவின் முக்கிய நிகழ்வான “மாலை தாண்டும் திருவிழா” என்ற காளைகளுக்கான ஓட்டப்பந்தய போட்டி நடந்தது.இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கொடிநாயக்கர் மந்தை, வெள்ளாள சீனிநாயக்கர் மந்தை, எட்டமநாயக்கர் மந்தை உள்ளிட்ட 14 மந்தைகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.

ராஜகம்பள சமுதாய மக்கள் தாங்கள் வளர்த்த காளைகளை கொத்துகொம்பு என்ற இடத்திற்கு அழைத்து சென்றனர்.பின்னர் அங்கிருந்து உருமி ஓசை முழங்கியதும், காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகள் சீறிப்பாயந்து எல்லைக்கோட்டை நோக்கி ஓடின. எல்லையில் மூங்கில் கம்பு மற்றும் வெள்ளைக்கொடியால் தோரண வாசல் கட்டப்பட்டது.

போட்டியின்போது பொதுமக்கள் கைகளைத்தட்டி மாடுகளை உற்சாகமூட்டினர். அதன்பின்னர் எல்லைக்கோட்டை கடந்து சென்ற காளைகள் மீது மஞ்சள்பொடி தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில் முதலிடம் பிடித்த காளைக்கு பாரம்பரிய முறைப்படி எலுமிச்சைபழம், மஞ்சள் பொடி, கரும்பு மற்றும் கொழுக்கட்டைகளை பரிசாக வழங்கப்பட்டது.இவ்விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com