தெலங்கானாவில் சினிமா பாணியில் பெண் ஒருவர் கொடூரக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ‘சைக்கோ’ கொலையாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகில் உள்ள கதிர்காடு பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் ஒரு பெண்ணின் தலை கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற காவல்துறையினர், தலை மட்டும் கிடப்பதை கண்டு அதிர்ந்து போனார்கள். இதுகுறித்து தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது இந்த தலைக்கு சொந்தகாரப் பெண்மணி அனுராதா என்பதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து இந்த கொடூர கொலையை செய்தது யார்? என தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் அனுராதா குடியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளர் இந்த படுபயங்கர கொலையை செய்துள்ளார் என்று நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் கண்டுபிடித்தனர்.
அவர் எதற்காக இந்த கொலையை செய்ய வேண்டும்? என காவல்துறையினர் மீண்டும் விசாரணையை முடுக்கிவிட்டனர். அப்போது, பயங்கரமான அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
அதாவது, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சைதன்யாபுரி என்ற பகுதியில் வசித்து வந்தவர் 55 வயதான பெண் செவிலியர் அனுராதா. இவர் இந்த பகுதியில் உள்ள கேர் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவரின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு உயிர் இழந்த நிலையில், இவரது ஒரே மகள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதனால், அனுராதா தனியாக வசித்து வந்துள்ளார்.
இதனிடையே, கேர் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக வந்த சைதன்யாபுரி பகுதியை சேர்ந்த சந்திரமெளலி என்பவருக்கும், அனுராதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கத்தின் அடிப்படையில் அனுராதா சந்திரமெளலியின் வீட்டில் கீழ் பகுதியில் வாடகைக்கு குடியேறினார். மேலும், அனுராதா இந்த பகுதியில் பணத்தை வட்டிக்கும் விட்டு வந்தார்.
இந்த நிலையில், சந்திரமெளலி அவ்வப்போது சிறுகச்சிறுக அனுராதாவிடம் மொத்தம் 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதில், பங்கு சந்தையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, மொத்த பணத்தையும் இழந்துள்ளார்.
இந்த நிலையில் வாங்கிய பணத்தை சந்திரமெளலியிடம் அனுராதா கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சந்திரமெளலி தனது வீட்டில் ஆடு அறுப்பதற்காக வைத்து இருந்த கத்தியை எடுத்து அனுராதாவை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார்.
பின்னர், அவரின் உடலை எவ்வாறு யாருக்கும் தெரியாமல் மறைப்பது? என திட்டமிட்டு, அனுராதாவின் தலையை ஆடு அறுப்பதுபோல அறுத்து, துண்டாக்கி எடுத்துவிட்டு, பின்னர் உடலின் ஒவ்வொரு பாகங்களையும், அதாவது கை, கால், விரல், தொடை, இடுப்பு என உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் தனித்தனியாக வெட்டி எடுத்து அதனை தனது வீட்டில் உள்ள ஃபிரிட்ஜில் வைத்துள்ளார்.
மேலும் தூர்நாற்றம் ஏற்படக்கூடாது என்பதற்காக கற்பூரம், பத்தி, சந்தனம் என விதவிதமான நறுமணப் பொருட்களை ஃபிரிட்ஜை சுற்றி வைத்துள்ளார்.
மேலும், இரவு நேரங்களில் உடலின் ஒவ்வொரு பாகங்களையும் பையில் எடுத்துச் சென்று ஒவ்வொரு பகுதிகளிலும் வீசியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றவாளியை காவல்துறை எப்படி கைது செய்தனர்? என்பதுதான் செம ஹாட் நியூஸ். அதாவது சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராவில், சந்திரமெளலி ஆட்டோவில் இருந்து பையோடு இறங்குவதுதான் காவல்துறையினருக்கு கிடைத்த முக்கிய துருப்புச் சீட்டு.
இந்த காட்சிகளின் அடிப்படையிலேயே காவல்துறையினர் விசாரணை நடத்தி, கொலையாளி சந்திரமெளலிதான் என முடிவுக்கு வந்துள்ளனர். இதனையடுத்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.