கூட்டணி அமைத்த வியாபாரிகள்- கொள்ளையர்களைப் பிடித்த டெக்னாலஜி

ஒற்றுமையாக செயல்பட்டால் இந்த திருடர்களை பிடித்து விடலாம்’’ என்று ஐடியா கொடுத்தனர்
கைது செய்யப்பட்ட திருடர்கள்
கைது செய்யப்பட்ட திருடர்கள்

திருச்சியை சேர்ந்தவர் செல்லையா மகன் சிவராஜா. இவர் சென்னையில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் கடந்த 5 வருடமாக டிரைவராக வேலை செய்து வருகிறார். லாரி உரிமையாளரின் நம்பிக்கைக்கு உரியவரான டிரைவர் சிவராஜா சென்னையில் இருந்து திருச்சிக்கு ரெகுலராக லோடு ஏற்றி சென்று வந்துள்ளார்.

கடந்த மாதம் 22 ந்தேதி சென்னையில் இரவு இருந்து ஈச்சர் லாரியில் வாகன உதிரிபாகங்களை ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார். கடந்த 23ம் தேதி அதிகாலையில் 3 மணி அளவில் தூக்கம் கண்களை சுழற்றவே தான் வழக்கமாக லாரியை நிறுத்தி ஓய்வெடுக்கும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங் அருகில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கி உள்ளார். பின்னர் காலையில் லாரியை எடுத்துக் கொண்டு திருச்சிக்கு சென்று கம்பெனியில் லாரியை நிறுத்திவிட்டு மேனேஜரிடம் சொல்லிவிட்டு கிளம்பி உள்ளார்.

அப்போது மேனேஜர் லாரியை சோதனை செய்த போது லாரியில் இருந்த 49 அட்டைப்பெட்டியில் இருந்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள வாகன உதிரி பாகங்கள் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து லாரி டிரைவர் சிவராஜாவிடம் கேட்டபோது லாரி எங்கேயும் நிறுத்தவில்லை. வழக்கமாக நிறுத்தும் இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கி விட்டு வந்தேன் என கூறியுள்ளார்.

பின்னர் இச்சம்பவம் குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் லாரி கம்பெனியின் பணியாளர் குமரகுரு புகார் அளித்தார். புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். மேலும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். போலீசார் இந்த உதிரி பாகங்கள் எல்லாரும் வாங்கக்கூடிய பொருட்கள் அல்ல. இதை எல்லா இடத்திலும் விற்று விட முடியாது. எப்படி சுற்றி வந்தாலும் இதை இன்னொரு உதிரிபாக வியாபாரியிடம் தான் விற்க முடியும். நீங்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் இந்த திருடர்களை பிடித்து விடலாம்’’ என்று ஐடியா கொடுத்தனர்.

அதேபோல் செயல்பட்ட வியாபாரிகள் உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள தங்கள் வாட்ஸ் அப் குரூப்புகளில் இந்த மாதிரியான உதிரி பாகங்கள் என்ன தேதியில் இந்த இடத்தில் திருடு போய்விட்டன. இப்படிப்பட்ட உதிரி பாகங்கள் வந்தால் இவற்றை யாரும் விலைக்கு வாங்காதீர்கள். அது மட்டும் அல்லாது அப்படி விற்கப்படும் நபர்களை பிடித்துக் கொடுத்தால் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட திருட்டுக்களை நாம் தடுக்க முடியும்’’என்று மின்னலாய் தகவல்களை பரப்பினர்.

இது தெரியாமல் திருடிய பொருட்களை சென்னையில் உள்ள ஒரு கடையில் பாதி விலைக்கு மூன்று பேர் விற்க முயன்றனர். அப்போது கடைக்காரர் உதிரி பாகங்களுக்கு உரிய பில் கேட்டுள்ளார். அதில் மூன்று பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். ஏற்கனவே திருட்டு உதிரி பாகங்கள் குறித்த தகவல் தெரிந்திருந்தால் சந்தேகம் அடைந்த கடைக்காரர் இது குறித்து அப்பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அப்பகுதி போலீசார் விரைந்து வந்து மூன்று பேரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் திருச்சி, சிறுகனூரில் உள்ள பெட்ரோல் பங்கில் லாரி நிறுத்தி இருந்தபோது மற்றொரு லாரி மூலம் உதிரிபாகங்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து சிறுகனூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவல் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் கவனத்துக்கு போனது. அவரது உத்தரவின் பேரில் லால்குடி டி.எஸ்.பி அஜய் தங்கம் வழிகாட்டுதல்படி சிறுகனூர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையில் போலீசார் மூன்று பேரையும் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் சென்னை, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் 45 வயதான முத்து, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் 19 வயதான அருள்குமார், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிவேலு மகன் 19 வயதான ஸ்ரீதரன் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான தாத்தா பேபி, அலெக்ஸ் மற்றும் உதிரி பாகங்களை திருடி எடுத்துச் சென்ற லாரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ரூ.20 லட்சம் மதிப்புள்ள 49 அட்டைப் பெட்டிகளில் திருடிச் சென்ற உதிரி பாகங்களில் 39 அட்டைப்பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த சிறுகனூர் போலீசார், அவர்களை கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

- ஷானு

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com