தடையை மீறி பள்ளிக்குள் செல்போன்; கண்டித்த ஆசிரியர்- விபரீத முடிவு எடுத்த மாணவன்

தடையை மீறி பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்ததை, ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆற்றில் குதித்து உயிரிழப்பு
ஆற்றில் குதித்து உயிரிழப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செட்டிமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். கட்டுமான தொழிலாளியான இவரது மகன் சிவராஜன், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பதினொரவது படித்து வந்தார். பள்ளியில் பதினொரவது வகுப்பிற்கு இன்னும் சீருடை வழங்காததால் சாதாரண உடையிலேயே மாணவர்கள் பள்ளிக்கு சென்று வந்துள்ளனர்.

அதை தொடர்ந்து பள்ளிக்கு செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சிவராஜன் பள்ளிக்கு செல்போன் எடுத்துச் சென்றுள்ளார். இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் சிவராஜனை கண்டித்ததோடு, பெற்றோரை அழைத்துவருமாறு கூறியிருக்கின்றனர்.

உயிரிழந்த சிவராஜன்
உயிரிழந்த சிவராஜன்

பெற்றோரை அழைத்து வர பயந்த சிவராஜன் பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் கும்பகோணத்திலிருந்து பேருந்து மூலம் காரைக்கால் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை காரைக்கால் முகத்துவாரத்தை ஒட்டியுள்ள அரசலாற்றில் மாணவர் சிவராஜன் உடல் மிதந்துள்ளது.

இது குறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் சம்பவ இடத்திற்கு வந்தார். மேலும் போலீசார் ஆற்றில் மிதந்த மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாணவரின் அடையாள அட்டையை வைத்து அவரது பெற்றோர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் தகவல் அளித்துள்ளனர்.

மாணவர் சிவராஜன் உயிரிழப்பு
மாணவர் சிவராஜன் உயிரிழப்பு

தகவலறிந்து விரைந்து வந்த பெற்றோர்கள் மகன் சிவராஜின் உடலைப்பார்த்து கதறி அழுதனர். இது தொடர்பாக காரைக்கால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவரின் இறப்பு தொடர்பாக பள்ளி நிர்வாகம் பேசுகையில், "சிவராஜிடம் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என்று பலமுறை கூறியும் தினமும் செல்போனுடனே பள்ளிக்கு வருவதோடு, விதியினை பொருட்படுத்தாது பள்ளி வளாகத்தினுள்ளேயே மொபைல் போனில் பேசி வந்துள்ளார். இதனால்தான் நாங்கள் அவரது பெற்றோரை அழைத்து வரச்சொன்னோம். அதுவும் அவருக்கு அட்வைஸ் செய்யவே அழைத்துவரச் சொன்னோம். இந்த மாணவரால் மற்ற மாணவர்களும் கெட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில்தான் அப்படிச் சொன்னோம். ஆனால் இப்படி நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவரது இறப்பு எங்களுக்கும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது" என்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com