'பள்ளி மாணவன் மீது தாக்குதல்' ஆசிரியருக்கு பாடம் கற்பித்த மக்கள் - என்ன நடந்தது?

பள்ளி மாணவன் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியரைக் கைது செய்ய வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் மக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'பள்ளி மாணவன் மீது தாக்குதல்' ஆசிரியருக்கு பாடம் கற்பித்த மக்கள் - என்ன நடந்தது?

திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பூவலம்பேடு திடீர் நகரைச் சேர்ந்த சுரேஷ்பாபு- செவ்வந்தி தம்பதியரின் மகன் ஹரிஹரன். இவர் குருவராஜகண்டிகை அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் பள்ளியின் தற்காலிக ஆசிரியர் மோகன்பாபு, ஹரிஹரனைப் பிரம்பால் அடித்துள்ளார். இதில் ஹரிஹரனுக்கு கைகள் கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமலும், வீட்டிற்கும் அனுப்பாமலும் இரவு எட்டு மணி வரை பள்ளியில் வைத்து ஐஸ் கட்டியால் வீக்கத்தைச் சரிசெய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து மாணவனிடம் வீட்டில் சொன்னால் பள்ளியை விட்டு நிறுத்தி விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மாணவன் பெற்றோரிடம் கூறாமல் தூங்கியுள்ளான். காலையில் கை, கால்வீங்கியதைக் கண்ட பெற்றோர் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

தற்காலிக ஆசிரியர் மோகன்பாபு
தற்காலிக ஆசிரியர் மோகன்பாபு

இது தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்த போது, தற்காலிக ஆசிரியர் மோகன்பாபு மாணவனைத் தாக்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் பெற்றோர், உறவினர்கள்மோகன்பாபுவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் பள்ளி வளாகத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மோகனை மீட்டுள்ளனர். ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com