தமிழகத்திலிருந்து வெளியேறி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தமிழில் பேச வாய்ப்பு இல்லாமல் போனது என நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
ஆவடி அடுத்த வேலப்பன்சாவடியில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ கல்வி ஆராய்ச்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படிப்பு முடித்த 2372 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் இல.கணேசன் முதலில் மாணவர்கள் முன்னிலையில் ஆங்கிலத்தில் சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்த சூழ்நிலையை புரிந்து கொண்டு தமிழில் பேச ஆரம்பித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் பேச, தமிழ் பேசுகிற அவைக்கு முன்பாக தமிழிலே ஒரு சில வார்த்தைகள் கூட பேசாமல் செல்வது என்பது மனதிற்கு ஒரு மாதிரியாக உள்ளது.
தமிழகத்தில் இருந்து வெளியேறி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தமிழில் பேச வாய்ப்பே இல்லாத நிலையில், வெகுஜன மக்கள் முன்பு தமிழில் பேசாமல் இருப்பது வெட்கமாக உள்ளது.
இங்கு இருக்கும் சிலர் கட்டபொம்மன், வ.உ.சி.யாக இருந்திருக்கலாம்.போன ஜென்மத்தில் பெண்ணாகவும் இந்த ஜென்மத்தில் ஆணாகவும் பிறந்திருக்கலாம்.
சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி வரும் 25 ஆண்டுகள் அமிர்த ஆண்டு என தெரிவித்துள்ளார். அதற்காக நாம் உழைக்க வேண்டும்” என பேசினார்.