அக்னி நட்சத்திரத்தின் ஆவேச அலைகள் நாட்டை வியர்வையடைய செய்த நிலையில், இன்று பல்வேறு மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பம் அலைகள் அதிகமாக காணப்படுகிறது. அதிலும், குறிப்பாக சென்னை, வேலூர், திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் 100 டிகிரி முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பம் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை உயரலாம் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளன. சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதே போல் 2020 ஆம் ஆண்டிலும் பதிவாகியது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் இவ்வளவு வெப்பம் பதிவாகியுள்ளது இதுவே முதன்முறையாகும்.
அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த வெப்ப அலைகளை நாம் தவிர்க்க முடியாது. ஆனால், இவற்றில் இருந்து நாம் பெரிய பாதிப்பு இல்லாமல் தப்பிக்க முடியும். வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நோயிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். எனவே தண்ணீர் அதிகமாக குடித்து வெயிலுக்கு தகுந்த உணவை உட்கொண்டு உடல்நிலையில் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தப்படுகிறது.
நீர்சத்து மிகுந்த காய்கறி மற்றும் பழங்களை உணவு முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெயில் மிகுதியாக காணப்படும் மதிய நேரங்களில் பெரும்பாலும் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
- கோபிகா ஸ்ரீ