நாடு முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி எடுக்கிறது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று கோடை வெயில் சதம் அடித்துள்ளது.
நடப்பாண்டில் முதன்முறையாக சென்னையில் நேற்றைய தினம் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடை மழை தணிந்த நிலையில் வெப்பநிலை உச்சம் தொட ஆரம்பித்துவிட்டது.
தமிழ்நாட்டில் நேற்றுஅதிகபட்சமாக வேலூரில் 106.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும்,சென்னையில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், கடலூர், ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், நாகை, பரங்கிப்பேட்டை, பாண்டிச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 13 இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது.
காலையில் பணிக்குச் செல்லும் பலரும் வெயிலில் குளித்தபடியே வியர்வையில் நனைந்து செல்கின்றனர். காலை 9 மணி முதலே கடும் வெயில் கொளுத்துகிறது. காலையிலேயே இப்படியானால், பகல் 12 மணிக்கு மேல் சொல்லவா வேணும். உச்சம் தொட்டு விடுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள், சாலையில் செல்வோர், பாதசாரிகள் பலரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே நா வறட்சியை ஏற்படுத்தும் வெயிலின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள மக்கள் பலரும் சாலையோரம் உள்ள இளநீர் கடைகள், ஜூஸ் கடைகள், சர்பத் கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு செல்வது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் மதிய நேரத்தில் தேவையில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நோயிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். எனவே தண்ணீர் அதிகமாக குடித்து வெயிலுக்கு தகுந்த உணவை உட்கொண்டு உடல்நிலையில் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தப்படுகிறது.