தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘திராவிட மாடல் என்ற கொள்கை எல்லாம் எப்போதோ காலாவதியாகிவிட்டது. அதற்கு மீண்டும் உயிர்கொடுக்க நினைக்கிறார்கள். இது ஒரே பாரதம், ஒரே இந்தியா கொள்கைக்கு பொருந்தாத ஒன்று.
திராவிட மாடல் கொள்கை நாட்டின் சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடுகிறது. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான தியாகிகள் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரையே தந்துள்ளனர்.
அவர்களின் நினைவு மற்றும் வரலாற்றை அழிக்கும் வகையில் பேசப்படுகிறது’ என கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவியின் இந்த பேட்டிக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.
அதில், ‘கமலாலயத்தில் அமர வேண்டியவர் ராஜ்பவனில் அமர்ந்து அரசியல் செய்து வருகிறார். அந்த பேட்டியை பார்க்கும்போது ஆர்.என்.ரவி ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை. பா.ஜ.க தலைவர் பதவிக்காக வந்துள்ளதுபோல் தெரிகிறது.
ஆளுநர் ரவி ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழ்நாடு அமைதி பூங்காதான். ஆளுநர் உரைகள் அமைதியை சீர்குலைப்பதாக அமைந்துள்ளன என்பதுதான் உண்மை.
ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆளுநர் பணியை தவிர அனைத்து பணிகளையும் செய்து கொண்டு இருக்கிறார். மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் இருப்பதை மறந்துவிட்டு ஆளுநர் பேச வேண்டாம்.
தான், எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்தை மீறி நிர்வாக விவரங்கள் குறித்து பொதுவெளியில் பேசி வருகிறார். மாநில அரசு எழுதி அனுப்புவதை வாசிக்க விருப்பம் இல்லை என்றால் வேறு வேலையை பார்க்க வேண்டும். அது தவிர, அவையின் மாண்பை குறைக்கும் உரிமை எவருக்கும் இல்லை.
ஆளுநர் பதவி என்பது மாநில அரசின் பிரதிபலிப்பு தானே தவிர, தனிப்பட்ட அதிகாரம் கொண்ட பதவி இல்லை. ஆளுநர் பதவியில் உள்ளவர்கள் அதற்கான தனித்தன்மையுடன் நடக்க வேண்டுமே தவிர தனி ஆவர்த்தனம் செய்யக் கூடாது’ என கூறியுள்ளார்.