‘வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வந்துவிடாது’ - ஆளுநர் ஆர்.என்.ரவி

‘வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வந்துவிடாது’ என தமிழக ஆளுநர் ரவி பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஆளுநர் பேச்சு
ஆளுநர் பேச்சு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு இன்று நடந்தது. மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ‘இரண்டாம் உலகப்போருக்கு பிறகு தொழில்நுட்பம் வளர்ந்து வந்தது. எனவே கணினியின் தேவை அதிகரித்தது.

இதன் மூலம் கணினி கல்வி கற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இந்தியாவில் தொலைத்தொடர்பு, தொழில் நுட்பம் வளர்ந்ததால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்தன.

காலமாற்றத்துக்கு ஏற்ப கல்வியில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நவீன காலத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பங்கள் வளர்ந்து வருவதால் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்.

தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது. தற்போது வளரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. இளைஞர்களின் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை.

சர்வதேசப் புவிசார் அரசியல் மாற்றத்தால் பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள்கட்டமைப்பு மேம்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. திறன் வாய்ந்த மனிதவளத்தை உருவாக்கினால் மட்டுமே அன்னிய முதலீடுகளை கவர முடியும்.

நாம் கேட்பதாலோ அல்லது வெளிநாடுகளுக்கு நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் எதுவும் வராது. உலகலாவிய பெரும் தொழில் அமைப்புகளுடன் சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்’ என்றார்.

முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் துபாய், சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com